2010-11-01 15:26:29

ஈராக் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் கத்தோலிக்க கோவில் ஒன்றைத் தாக்கியதில் 52பேர் வரை உயிரிழப்பு


நவம்பர் 1, 2010 - ஈராக் நாட்டில் இஞ்ஞாயிறன்று இஸ்லாமியத் தீவிரவாதிகள் கத்தோலிக்க கோவில் ஒன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 52 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவித்தார் ஈராக்கின் துணை உள்துறை அமைச்சர் ஹூசைன் கமால்.

பாக்தாத்தின் மீட்பின் அன்னை தேவாலயத்தில் ஏறத்தாழ 100 பேர் திருப்பலியில் பங்குபெற்றுக்கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அங்கிருந்தவர்களைச் சிறைப்பிடித்ததுடன், அரசு சிறைகளில் வைக்கப்பட்டுள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் விடுவிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

கோவிலினுள் நுழைந்து விசுவாசிகளைத் தாக்கிய தீவிரவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து காவல்துறை அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டதில் 6 தீவிரவாதிகள் உட்பட 52 பேர் உயிரிழந்ததாகவும் 56 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கின் உள்துறை துணை அமைச்சர் அறிவித்தார்.

கோவிலினுள் நுழைந்த தீவிரவாதிகள் முதலில் அங்கிருந்த குருவானவரைச் சுட்டுக் கொன்றதாகவும், பின்னரே மற்றவர்களைத் தாக்கியதாகவும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

2004லும் மீட்பின் அன்னை ஆலயம் வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது உட்பட பல கோவில்கள் கடந்த ஆண்டுகளில் ஈராக்கில் தாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 5 இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழும் ஈராக் நாட்டில் 2003ம் ஆண்டின் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆக்ரமிப்பிற்குப் பின் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு அச்சத்தின் பேரில் வெளியேறுவது தொடர்ந்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.