2010-10-29 15:19:41

பிரேசில் நாட்டு ஆயர்களைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை


அக்.29, 2010 - மனித சமுதாயத்தில் ஒரு புளிப்புமாவாக இருந்து செயல் படுவதும், மனிதர் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதை உணரச் செய்வதுமே திருச்சபையின் முக்கிய பணி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆயர்களுடன் நடைபெறும் Ad Limina சந்திப்பில், பிரேசில் நாட்டு ஆயர்களை இவ்வியாழனன்று சந்தித்துப் பேசியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவன் வகுத்த இயற்கை நியதிகளை மனிதர்கள் பின்பற்றுவதற்கு அவர்களை வழி நடத்துவதும், தொடர்ந்து அவர்கள் அந்த நிலைப்பாட்டில் இருப்பதற்கு உதவிகள் செய்வதும் ஆயர்களின் கடமை என்று கூறினார் திருத்தந்தை.
அரசியலில் நேரடியாக ஈடுபடுவது பொது நிலையினரின் பொறுப்பு என்றாலும், அரசியல் தீர்மானங்கள் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளுக்கு முரணாகச் செல்லும் போது, அறநெறி கோட்பாடுகளை மீண்டும் மக்களுக்கு எடுத்துரைப்பது திருச்சபையின், ஆயர்களின் கடமை என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.இம்மாத இறுதியில் பிரேசில் நாட்டின் அரசுத் தலைவருக்கான தேர்தல்கள் இடம் பெற உள்ளதைக் குறித்துத் திருத்தந்தை தன் உரையில் குறிப்பிடவில்லை என்றாலும், விசுவாசிகளின் மனசாட்சியை நல்வழியில் நடத்தி, அவர்கள் தெளிவான அரசியல் முடிவுகளை எடுக்க ஆயர்களின் வழிநடத்துதல் தேவை என்பதைத் தன் உரையில் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.