2010-10-29 15:23:01

இந்தியா உட்பட ஆசியாவின் பல நாடுகளில் ஊழல் பெருகியுள்ளது - அகில உலக அறிக்கை


அக்.29, 2010 - ஆசியாவின் பல நாடுகளில் ஊழல் இன்னும் குறையாமல் பெருகியுள்ளதேன்று அகில உலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
Transparency International என்ற உலக அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் இவ்வறிக்கை, 2010ம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
178 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் பேரில், மியான்மார், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகளென்று இந்த ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு மற்றும் பொதுநல ஊழியர்கள் மத்தியில் காணப்படும் ஊழலைக் கணிக்க மேற்கொள்ளப்படும் இந்தக் கருத்துச்சேகரிப்பில் ஆசிய முன்னேற்ற வங்கி (Asian Development Bank), உலக வங்கி (World Bank), ஐரோப்பிய ஒன்றியம் (European Union) ஆகிய அமைப்புகளில் பணிபுரியும் பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் கருத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.
மியான்மாரில் நடைபெறும் இராணுவ ஆட்சியால், அங்கு எந்த ஒரு காரியமும் நிறைவு பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதென்பதால், அந்நாடு ஊழலில் முதலிடம் வகிக்கிறதென்று இவ்வறிக்கை கூறுகிறது.
அரசு ஊழியர்கள் பெறும் லஞ்சம், பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுதல், லஞ்சம் இன்றி எந்த ஒரு செயல்பாடும் நிகழாமல் இருத்தல் ஆகிய அம்சங்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் மேற்கொள்ளப்பட்டன.178 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்துக் கணிப்பில், ஊழல்கள் மிகவும் குறைந்த நாடுகளென Denmark, New Zealand, Singapore ஆகிய நாடுகள் முதலிடங்களை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டை விட மூன்று படிகள் தாழ்ந்து 87வது இடத்தில் உள்ளது.







All the contents on this site are copyrighted ©.