2010-10-28 15:42:50

இலயோலா-ஈகாம் பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி


அக். 28, 2010 - வத்திக்கான் நகரத்தில் போப் ஆண்டவர் சன்னிதானத்தில் காணும் உணர்வு இலயோலா கல்லூரியில் நுழையும் போது ஏற்படுகிறது என இப்புதனன்று சென்னையில் இலயோலா-ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி திறப்பு விழாவில் தலைமை வகித்த முதல்வர் கருணாநிதி கூறினார்.
85 ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்வியை வழங்கி தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் இந்த இலயோலா கல்லூரியில் 30% மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, ஏழை சிறுபான்மை மாணவர்கள் என்பது போற்றத்தக்கது எனவும் பாராட்டினார் அவர்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், தன்னைப் போன்ற இலயோலாவின் முன்னாள் மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான நாள் என்றும், ஒரு பொறியியல் கல்லூரி அல்ல, இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளை இலயோலா கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விழாவுக்கு வந்தவர்களை இலயோலா-ஈகாம் கல்லூரியின் இயக்குனர் அருள்தந்தை பிரான்சிஸ் சேவியர் வரவேற்றுப் பேச, இயேசு சபை சென்னை பணித்தளத் தலைவர் அருள்தந்தை விக்டர், பிரான்ஸ் நாட்டு ஈகாம் கல்வி நிறுவன இயக்குனர் மார்க் ஜெனியூட், துணை இயக்குனர் அருள்தந்தை ஜோ அருண், அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோரும் உரையாற்றினார்கள். பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோஸ் நன்றி கூறினார்.இலயோலா கல்லூரி, பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈகாம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் இலயோலா-ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியைத் தொடங்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.