2010-10-27 14:37:19

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


அக் 27, 2010. உரோம் நகரின் காலநிலை மிகக்குளிராக இல்லாமல் ஓரளவு இதமாக இருந்ததால் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இவ்வார புதன் பொது மறைபோதகம் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இடம்பெற்றது.

இன்றைய நம் மறைக்கல்வி போதனையில் ஸ்வீடனின் புனித பிரிஜிட் பற்றி நோக்குவோம் என தன் உரையைத்துவக்கினார் பாப்பிறை. 1303 ம் ஆண்டு பிறந்த புனித பிரிஜிட் மிக ஆழமான விசுவாசத்தில் வளர்ந்தார். இவரும் இவரது கணவரும் எட்டு குழந்தைகளைக் கொண்டிருந்தனர். இத்தம்பதியரின் வாழ்வு முழுவதும் அவர்களின் ஆன்மீக வாழ்வுக்கும், அக்குழந்தைகளை கிறிஸ்தவ வழியில் உருவாக்குவதற்கும் என செலவிடப்பட்டது. திருமணப் புனிதத்துவத்திற்கான மிகப்பெரும் ஊக்கச்சக்தியாக விளங்கிய புனித பிரிஜிட், ஒரு குடும்பத்தின் ஆன்மீக மையமாக எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான பெண்களின் எடுத்துக்காட்டாக கடந்த காலங்கள் முழுவதும் இருந்து வருகிறார். தன் கணவரின் மரணத்திற்குப் பின் வேறு திருமணம் புரிவதைக் கைவிட்ட இப்புனிதர், ஜெபம், ஒறுத்தல் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் இறைவனுடன் ஆன ஐக்கியத்தை ஆழப்படுத்தினார். தன் சொத்துக்களையெல்லாம் பிறருக்கு வழங்கி விட்டு துறவு இல்லம் ஒன்றில் வாழ்ந்தார். தன் ஜெப வேளைகளில் மிக ஆழமான இறை அனுபவங்களையும் பெற்றார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் என துறவு சபைகளை உருவாக்க விரும்பிய புனித பிரிஜிட், அதற்கான அங்கீகாரத்தைத் திருத்தந்தையிடம் இருந்து பெற உரோம் நகர் சென்றார். அந்நகரில் இருந்தபோது ஆழமான ஜெபத்திலும் ஆன்மீக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். 1373ம் ஆண்டு உயிரிழந்த இவர், 18 ஆண்டுகளுக்குப் பின் புனிதராக அறிவிக்கப்பட்டார். ஒன்றிணைந்த மேற்கத்திய கிறிஸ்தவத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கும் இவர், பெண்ணிய புனிதத்துவத்தின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளார். மிகப்பெரும் ஜூபிலிக் கொண்டாட்டத்தின்போது வணக்கத்துக்குரிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதர் பிரிஜிட்டை ஐரோப்பாவின் இணைப்பாதுகாவலராக அறிவித்தார். கிறிஸ்தவர்கள் அனைவரின் ஒன்றிப்பிற்கும், ஐரோப்பியர்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் மதிப்பிடமுடியாத கிறிஸ்தவ பாரம்பரியத்தை மேன்மேலும் உணர்ந்து பாராட்ட ஒன்றிணைந்து வருவதற்கும் புனிதர் பிரிஜிட்டின் பரிந்துரைகள் உதவுவதாக. இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.