2010-10-27 16:34:18

உலகின் அமைதி முயற்சிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு


அக்.27, 2010 - உலகில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளில் பெண்கள் இன்னும் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
2000ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் இந்தத் தீர்மானம் பத்து ஆண்டுகள் கழித்தும் இன்னும் அனைத்து நாடுகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை என்று ஐ.நா. அமைப்பு தன் கவலையை வெளியிட்டது.
இத்தீர்மானத்தின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, ஐ.நா.தலைமையகத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்திற்குத் தன் செய்தியை அனுப்பியுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அமைதி முயற்சிகளில் பெண்களின் பங்கு குறித்து இவ்வுலக அரசுகள் நன்கு உணர்ந்திருந்தாலும், இன்னும் அவர்களை இம்முயற்சிகளில் ஈடுபடுத்தத் தயங்குகின்றன என்று கூறினார்.அமைதி முயற்சிகளில் பெண்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அண்மைக் காலங்களில் போருக்கும், தீவிரவாதச் செயல்களுக்கும் பெண்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு போக்கு என்றும் பான் கி மூன் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.