2010-10-26 15:43:51

குடிபெயர்வோர் மற்றும் அகதிகளுக்கான உலக தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி


அக் 26, 2010. வரும் ஆண்டு ஜனவரி மாதம் 16ந்தேதி திருச்சபையில் சிறப்பிக்கப்பட உள்ள குடிபெயர்வோர் மற்றும் அகதிகளுக்கான 97வது உலக தினத்திற்கானச் சிறப்புச் செய்தியை 'ஒரே மனிதகுல குடும்பம்' என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உண்மையான, நீடித்த அமைதியை நீதி, பிறரன்பு என்ற தூண்களின் மேலேயே கட்டியெழுப்ப முடியும் என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நீதியான வேறுபாடுகளை மதித்து ஏற்பதற்கும் ஒன்றித்து வாழ்வதற்கும் உதவும் வகையிலான, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அனைவரும் செல்லும் பாதை ஒன்றாயினும் சந்திக்கும் சூழல்கள் வேறுபடுகின்றன எனக்கூறும் திருத்தந்தையின் செய்தி, நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும், நிரந்தரமான முறையிலும் தற்காலிகமாகவும், பொருளாதார அல்லது அரசியல் காரணங்களுக்காகவும், சுயமாக அல்லது கட்டாயத்தின் பேரிலும் பல்வேறு மக்கள் குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

உலகின் வளங்கள் அனைத்தும் அனவருக்குமானது என்ற அடிப்படையில் ஒருமைப்பாடும் பகிர்தலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்பதை அனைவரும் உணரவேண்டும் எனவும் அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

தங்கள் நாடுகளிலிருந்து மக்கள் பிற நாடுகளுக்குக் குடிபெயர்வதைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசுகளின் கடமையும், அது மக்களின் மனித மாண்பை மதிப்பதோடு இடம்பெறவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது அச்செய்தியில்.

வேறு நாடுகளுக்குக் குடிபெயர்வோர் அந்நாடுகளின் சட்டங்களை மதித்து அந்நாட்டோடு ஒன்றிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இரு நாடுகளிடையே கலாச்சார மற்றும் பொருளாதார பாலங்களாக இருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கடமையையும் எடுத்துரைத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.