2010-10-26 15:46:31

இன்றைய திருச்சபையின் விலைமதிக்க முடியாத செல்வங்கள் திருநற்கருணையும் ஏழைகளும்


அக் 26, 2010. இன்றைய திருச்சபையின் விலைமதிக்க முடியாத செல்வங்கள் திருநற்கருணையும் எழைகளும் என்றார், திருத்தந்தையால் அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்ட கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித்.

இத்திங்களன்று கொழும்பு பெருமறைமாவட்ட குருக்களைச் சந்தித்து மேய்ப்புப்பணி முக்கியத்துவம் குறித்து உரையாடிய கொழும்பு பேராயர், கிறிஸ்தவ அடிப்படைவாத குழுக்கள் கத்தோலிக்க விசுவாசிகளைக் கவர்ந்திழுப்பதைத் தடுக்க வேண்டுமெனில், விசுவாசிகளின் மேய்ப்புப்பணி மற்றும் ஆன்மீகம் சார்ந்த தேவைகள் நிறைவேற்றப்பட்டு பலப்படுத்தப்படவேண்டும் என்றார். இவ்வாறு விசுவாசிகள் வேறு சபைகளை நாடி ஓடுவதற்கான காரணம், அவர்களின் ஆன்மீக குழப்ப நிலைகளும், எழ்மையும் என்ற அவர், நம் குறைபாடுகளையும் ஏற்று, உண்மை நிலைகளை தைரியமாக எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்றார்.

ஒவ்வொரு கத்தோலிக்கக் குடும்பமும் குருக்களால் சந்திக்கப்பட்டு, அவர்களுக்கான மேய்ப்புப்பணி அக்கறை வெளிப்படுத்தப்படவேண்டும் என்ற கொழும்பு பேராயர், ஏழ்மை நிலைகளை ஒழிப்பதற்கான நம் அனைத்து முயற்சிகளும் செயல்படுத்தப்படவேண்டும் எனவும் கூறினார்.

தனக்கான வரவேற்பு நிகழ்ச்சிகளில் மாலைகளுக்கெனவும் ஏனைய ஆடம்பரச்செலவுகளுக்கும் என வீணாக்கப்படும் பணம் சேமிக்கப்பட்டு ஏழை மாணவர்களின் கல்விக்கென பயன்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார் அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித்.








All the contents on this site are copyrighted ©.