2010-10-25 16:20:50

கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான ஒன்றிப்புப் பேச்சுவார்த்தைகளில் அதிக அக்கறை காட்டிவருகிறது திருச்சபை - திருத்தந்தை


அக்.25, 2010 – மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் தனிமையில் இல்லை, திருப்பீடமும் அகில உலகத்திருச்சபையும் என்றும் அவர்களோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது என இஞ்ஞாயிறு திருப்பலியின் போது உறுதி வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

'ஐக்கியமும் சாட்சிய வாழ்வும்' என்ற தலைப்பில் இடம்பெற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆயர் மாமன்றத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி உரை வழங்கிய திருத்தந்தை, மூன்று வாரங்களாக உரோம் நகரில் கூடி மத்திய கிழக்குப் பகுதி குறித்த ஒரு தனிச்சிறப்பு அனுபவத்தைப் பெற உதவிய திருச்சபைத்தந்தையர்கள், தற்போது உரோமிலிருந்து அவரவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்றாலும், என்றும் அவர்கள் ஐக்கியத்தில் இணைந்தே உள்ளார்கள் எனவும் கூறினார்.

மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து மக்கள் குடிபெயர்வதை தடுப்பதற்கான சிறந்த தீர்வு அமைதியே எனக் கூறிய பாப்பிறை, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் அமைதியைக்கட்டி எழுப்புவதற்கும், ஒப்புரவின் தூதர்களாகச் செயல்படுவதற்கும் இருக்கும் கடமையையும் வலியுறுத்தினார்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கு உள்ளேயான முழு ஐக்கியம் என்பது கிறிஸ்தவ சபைகளிடையேயான பேச்ச்சுவார்த்தைகளுக்கு மிகவும் உதவுவதாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார் அவர். உண்மையான ஐக்கியம் இடம்பெறவேண்டுமெனில், நம் தவறுகளையும் இயலாமைகளையும் ஏற்கக்கூடிய தாழ்ச்சியுணர்வு நமக்கு வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

'அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக' என்ற இயேசுவின் ஜெபம் முற்றிலுமாக நிறைவேறும் வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான ஒன்றிப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.