2010-10-24 12:06:13

உலக மறைபரப்பு ஞாயிறுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய செய்தி:


அன்பர்களே, அக்டோபர் 24, இஞ்ஞாயிறு உலக மறைபரப்பு ஞாயிறு. இஞ்ஞாயிறுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய செய்தியை தமிழில் வழங்குகிறார் அருட்தந்தை உவரி அந்தோணி, மரியின் ஊழியர் சபை.
RealAudioMP3
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய செய்தி
மறைபரப்பு ஞாயிறைக் கொண்டாடும் இம்மாதத்தில் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் நம்முடைய நற்செய்தி அறிவிப்புப் பணியைப் புதுப்பித்துக் கொள்வோம். இவ்வாண்டு கிறிஸ்துவின் உடனிருப்பைத் தொடர்ந்து அனுபவிக்க நம்முடைய வழிபாடுகள், மறைக் கல்வி, அன்புப் பணி, பண்பாட்டு நிகழ்வுகளைச் சிறப்புடன் செய்து, கடவுளின் பிள்ளைகளாக இயேசுவோடும் நம் சகோதர, சகோதரிகளோடும் இணைந்து நம்பிக்கையுள்ள சாட்சிகளாக வாழ்வோம்.
"ஐயா, இயேசுவைக் காண விழைகிறோம்" என்று கேட்ட கிரேக்கத் திருப்பயணிகளின் வார்த்தைகள் நம் உள்ளத்தில் நிறைந்து, நற்செய்திப் பணி நம் ஒவ்வொருவரின் கடமை என நினைவில் கொண்டு, இறை சமூகத்தில் புது வாழ்வு அளிக்கும் கருவிகளாக மாற வேண்டும். தனிமை, நோய்கள், துன்பங்கள், அக்கறையற்ற நிலை இவற்றில் வாழும் சமூகத்தில், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை தந்து, தேவையற்ற பயன்களைக் களைந்து, சிறந்த இலட்சியங்களைத் தந்து, எல்லா மக்களும் நலமுடன் வாழக் கூடிய புதியதோர் சமூகம் படைக்க உதவுவோம்.
ஆண்டவர் இயேசுவைப் பற்றித் தெரியாத மக்கள் மத்தியில் அவரைப் பற்றி போதிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவரை வாழ்வில் அனுபவிக்கவும், மீட்பரின் பிரசன்னம் எங்கும், சிறப்பாக எல்லாக் கண்டங்களிலும் உள்ள இளையோர் மத்தியில், ஒளிரச் செய்வோம். கிறிஸ்தவர்கள் உணமைகளை உள்ளடக்கியுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டு வருபவர்கள் என எல்லா மக்களும் உணர்ந்து, அவர்கள் வாழ்வில் உண்மைகளை அறிந்து, வாழ்வின் பொருளைக் கண்டுகொள்ளச் செய்வோம்.
நற்கருணையை வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு, இயேசுவின் மறை உடலாகத் திகழும் திருச்சபை மூவொரு கடவுளோடு மக்களை இணைக்கிறது. மற்றவர்களோடு பகிர்ந்து வாழ உதவும் அன்புச் சின்னமான நற்கருணை, திருச்சபை வாழ்வின் அடித்தளமாகவும் உச்சமாகவும் இருப்பது மட்டுமன்றி, மறைபரப்புப் பணிக்கும் அச்சாணியாக உள்ளது.
உலக மறைபரப்பு ஞாயிறான இன்று, நம் உள்ளங்களில் நற்செய்திப் பணியில் ஆர்வத்தை உருவாக்கி, இப்பணியில் முழுமையாக ஈடுபட அழைக்கிறது. திருச்சபைக்கு உயிரோட்டத்தைத் தரும் நற்செய்திப் பணிக்காகச் செபிப்போம். இளம் தலத் திருச்சபைகளின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். இப்பணிக்காகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட திருச்சபையின் மறைபரப்பு ஆணையத்தில் உழைக்கும் அனைவருக்கும், மறைபரப்பு நாடுகளில் உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
இறுதியாக, சவால்கள் நிறைந்த நாடுகளில் இறையாட்சிப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ள ஒவ்வொருவருக்கும், அவர்களோடு தொடர்புள்ள நண்பர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மகிழ்ச்சியூட்டும் கடவுள், இவ்வருட்பணியாளர்களை அனைத்து ஆன்மீக நலன்களால் நிரப்பி மகிழ்ச்சி அளிப்பாராக.அன்னை மரியாவின் ஆம் என்ற பதில் போன்று திருச்சபையிலுள்ள அனைவரும் கடவுளின் அழைப்பை ஏற்று, நம்முடைய அன்புப் பணிகள் மூலம் புதுமையான அப்போஸ்தலிக்கத் தாய் திருச்சபையை உருவாக்குவோம். காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனை பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்து, தம்முடைய மறையுண்மைகளை வெளிப்படுத்தி, அப்போஸ்தலர்களுக்கு நம்பிக்கை, மன உறுதியைத் தந்தார். நாமும் நம்முடைய ஆம் என்ற பதில் வழியாக கடவுளின் மகிழ்ச்சியில் பங்கு பெற்று, எல்லா மக்களும் அவரின் பிள்ளைகளாக மாறவும், இயேசுவின் உடலாகிய திருச்சபையில் இணைந்து, இம்மனித சமூகத்தைத் தூய ஆவியின் ஆலயமாகக் கட்டி எழுப்புவோம்.







All the contents on this site are copyrighted ©.