2010-10-24 12:08:49

அக்டோபர் 25 நாளும் ஒரு நல்லெண்ணம்


காலங்கள் மாறும். காட்சிகளும் மாறும். சென்றவிடமெல்லாம் இளைய பாரதத்தைச் சந்தித்து கனவு காணுங்கள், இந்தியாவை உலகில் நம்பர் 1 ஆக உயர்த்தக் கனவு காணுங்கள் என்று சொல்லி வருபவர் இந்தியாவின் முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்த உலகம் வியக்கும் விஞ்ஞானிக்கும் தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட்டது என்று அவரைப் பற்றிய ஒரு செய்தியில் வாசித்தோம். அவர் சென்னையில் ஏரோநாட்டிகல் பொறியியல் கல்வி முடித்துவிட்டு, விமான ஓட்டி வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போனார். அதில் தேர்வாகவில்லை. பின்னர் விரக்தியில் இமயமலைக்குச் சென்று அங்கே சில நாட்கள் பனியிலும் குளிரிலும் விரும்பி அவதிப்பட்டார். மனது ஒரு நிலைப்பட்டவுடன் திரும்பியவருக்கு இஸ்ரோவில் வேலை கிடைத்தது. அக்னி, பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிப்பில் தனது திறமையை நிரூபித்தார். 1998இல் இந்தியா செய்த அணுகுண்டு சோதனைக்காக அப்துல் கலாமை தடை செய்யப்பட்ட விஞ்ஞானியாக அமெரிக்கா அறிவித்தது. அதே அமெரிக்கா இன்று கலாமை நாஸாவுக்கு அழைத்துப் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அப்துல் கலாம் இன்று பேசும் கூட்டங்களில் எல்லாம் வாழ்க்கையில் உச்சத்தை எட்ட, உயரப் பறக்க, கனவு காணுங்கள் என்று தன்னம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார். ஆம். காலங்கள் மாறும். காட்சிகளும் மாறும்.







All the contents on this site are copyrighted ©.