2010-10-22 15:56:12

ஈக்குவதோர், சுலோவேனியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் திருப்பீடத்துக்கானப் பதிய தூதர்களுடன் திருத்தந்தை


அக்.22,2010: சுலோவேனியா, போர்த்துக்கல், ஈக்குவதோர் ஆகிய நாடுகளின் திருப்பீடத்துக்கானப் புதிய தூதர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தென் அமெரிக்க நாடான ஈக்குவதோர் தூதர் Luis Dositeo Latorre Tapia விடம் பேசிய போது, அந்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற குடிமக்களின் பரிந்துரைகள் மிகவும் வரவேற்கப்படவேண்டிய விடயம் என்று தெரிவித்தார் திருத்தந்தை.

மனித முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான, கல்வி அமைப்புமுறையில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றங்கள், மாணவர்கள் மத்தியில் உண்மையின் மீதான அன்பை வளர்க்கும் என்றும் அவர் கூறினார்.

மனித வாழ்வு தாயின் கருவறை முதல் அது இயல்பான மரணம் அடையும் வரைப் பாதுகாக்கப்படுதல், சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் பிற சுதந்திரங்கள் உண்மையான சமூக நீதிக்கு தேவை, அதேசமயம் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, வன்முறை, எழுத்தறிவின்மை, இலஞ்சஊழல், தண்டனையிலிருந்து தப்பித்தல் போன்றவைகளை நீக்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது முக்கியம் என்றும் திருத்தந்தை கூறினார்.

மேலும், சுலோவேனியத் தூதர் Maja Maria Lovrenčič Svetek டம் பேசிய திருத்தந்தை, சுலோவேனியாவில் வேரூன்றியுள்ள நற்செய்தி விழுமியங்கள் அந்நாடு பிற நாடுகளுடன் நட்புறவுடன் வாழ உதவுகின்றன என்றுரைத்தார்.

மிகவும் கடினமான சூழல்களில் வாழ்வோர், குறிப்பாக, குடியுரிமை, வேலைவாய்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளில் உரிமைகளை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் சுலோவேனியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம் குறித்தத் தனது மகிழ்ச்சியையும் அவர் தெரிவித்தார்.

இன்னும், போர்த்துக்கல் புதிய தூதர் Manuel Tomás Fernandes Pereira விடம் பேசிய போது, தனிமனிதனின் நடத்தையை நிர்ணயிக்கும் அறநெறி மற்றும் ஆன்மீக விழுமியங்களை பொதுவாகவும் தனிப்பட்ட வாழ்விலும் வளர்ப்பதற்குத் தலத்திருச்சபை எடுக்கும் முயற்சிகள் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்பதைச் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை.

போர்த்துக்கல் அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையே இருக்கும் சரியானப் புரிந்து கொள்ளுதலும் மதிப்புடன்கூடிய ஒத்துழைப்பும் மட்டுமே சமுதாயத்திற்குப் பலன்களைக் கொடுக்கும் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்







All the contents on this site are copyrighted ©.