2010-10-22 15:28:22

அக்டோபர் 23. நாளும் ஒரு நல்லெண்ணம்


மக்கள் மனதை மாற்றுவதன் மூலம் புதியதோர் உலகம் படைக்க முடியும் என எண்ணுகின்றனர் அறிஞர்.

”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரணமாயிரு" என்பது மகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று.

எங்கிருந்து இந்த மாற்றத்தைக் கொணர்வது?

நாம் இந்த உலகிலிருந்து கற்று வருபவைகள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது பழையதைத் திருத்திக்கொள்கிறோம் அல்லது அதை அழித்து விடுகிறோம். புதியதாக நாம் பெறுவதும் முழு உண்மையின் வடிவம் அல்ல என்பதையும் உணர்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு நாளும் புது ஒளி பிறந்து கொண்டேயிருக்கிறது.

அறிவது ஒவ்வொன்றும் அறியாமையையே என்று நாராயணகுரு சொல்கிறார்.

நாம் ஏற்கனவே அறிந்திருப்பவைகளைப் புதுப்பிக்கவும், புடமிடவும் உதவுவதே கல்வி. நாம் அறியும் ஒவ்வொன்றும் ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றைப் பொய்யாக்குகிறது. அந்த வெற்றிடத்தில் தன்னை அமர்த்திக் கொள்கிறது என்பர் அறிஞர். முந்தையப் படிகளை நிராகரித்தே புதிய படியை அடைகிறோம்.

ஆகவே, புதியதோர் உலகம் படைக்க வேண்டுமெனில் நம் பழைய எண்ணங்கள் முதலில் மாற்றம் பெறவேண்டும். மதம், அரசியல், தத்துவம் சார்ந்து இறுகிப்போன மனங்கள் மனிதத்திற்காக இளகி புது ஒளி காண வேண்டும். அறியாமையிலிருந்தே பிறக்கும் ஆசையின் பிடியிலிருந்து மீட்பு பெற வேண்டும். முதலில் நம் மனங்களைத் திறந்து மாற்றத்திற்கு வழி வகுப்போம். நம் வழி உலகை மாற்றுவதற்கான வழி பிறக்கும்.








All the contents on this site are copyrighted ©.