2010-10-20 15:28:55

மத்திய கிழக்குப் பகுதிகளில் பணிகளுக்காகக் குடியேறி வந்துள்ள கத்தோலிக்கர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்படுகின்றனர் - ஆயர் Paul Hinder


அக்.20,2010. மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழும் கத்தோலிக்கர்களில் பாதி பேர் இந்தியா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலிருந்து குடியேறிவர்கள் என்று அரேபியாவுக்கான திருப்பீடப் பிரதிநிதி ஆயர் Paul Hinder கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பக்ரெய்ன், கட்டார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் வாழும் கத்தோலிக்கர்களின் மேய்ப்புப் பணிக்குப் பொறுப்பாளரான ஆயர் Hinder, வத்திக்கானில் இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
ஆயர் கூறிய கணிப்பின்படி, இன்று மத்திய கிழக்கு நாடுகளில் இருபது இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் பிலிப்பின்ஸில் இருந்தும், மற்றவர்கள் இந்தியா, இலங்கை, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
பணிகளுக்காகக் குடியேறி வந்துள்ள இக்கத்தோலிக்கர்களில் பலர் அடிமைகளைப் போல் நடத்தப்படுவதைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஆயர், இவர்களைக் குறித்தும் மத்தியக் கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் விவாதிக்காப்பட வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
இல்லங்களில் பணி செய்பவர்களைச் சரிவர நடத்தாமல் இருப்பது இஸ்லாமிய உலகத்தில் மட்டும் நடைபெறும் தவறு அல்ல, மாறாக, செல்வம் படைத்த கிறிஸ்தவர்களும் இப்பணியாளர்களைப் பல வழிகளில் துன்புறுத்துகின்றனர் என்று ஆயர் குறிப்பிட்டார்.குடியேறி வந்துள்ள கத்தோலிக்கர்களால் ஞாயிறு திருப்பலிகள் நேரத்தில் கோவில்கள் நிறைந்திருப்பதை மகிழ்வுடன் சுட்டிக்காட்டிய திருப்பீடப் பிரதிநிதி ஆயர் Paul Hinder, இவர்கள் கொடுமைகளை அனுபவிக்கும் போது, தலத் திருச்சபையின் உதவிகளை நாடுகின்றனர் என்பதையும் எடுத்துக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.