2010-10-20 13:07:45

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


அக் 20, 2010. இப்புதனன்று மழைக்கான வாய்ப்புகள் குறைவு என வானிலை மையங்கள் முதலிலேயே அறிவித்திருந்த போதிலும், காலையில் வானம் மேகமூட்டமாய் இருண்டு கொண்டுதான் இருந்தது. காலநிலை மிகக்குளிராய் மாறுமோ என்ற அச்சத்தின் மத்தியிலும் உரோம் நகரின் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில்தான் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை எட்டு மணிக்கு இருண்டு மேகமூட்டமாய் இருந்த வானம், ஒன்பது மணிக்கெல்லாம் சூரியக்கதிர்களை வீசி உலகை ஒளிமயமானதாக மாற்ற, இதமான ஒரு காலநிலையில் திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் பேராலய வளாகத்தை நிறைத்திருக்க, திருத்தந்தை 16ம் பெனடிக்டும் தன் மறைக்கல்வி போதனைகளை வழங்கினார்.

இன்றைய நம் மறைக்கல்வி போதனையில் ஹங்கேரியின் புனித எலிசபெத் குறித்து நோக்குவோம் எனத் தன் இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஹங்கேரியின் புனித எலிசபெத் என்பவர் துரிங்சியாவின் புனித எலிசபெத் எனவும் அறியப்படுகிறார். இப்புனிதர் 13ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்தவர். இவரின் தந்தை ஹங்கேரியின் மன்னராக இருந்தார். புனித எலிசபெத்தோ, அவரின் இளவயதிலேயே ஜெபத்தின் மீது உறுதியான பற்றுடையவராகவும் ஏழைகளின் மீது மிகுந்த அக்கறையுடையவராகவும் இருந்தார். Ludwig என்ற கோமகனை அரசியல் காரணங்களுக்காக இவர் மணம்புரிந்திருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பூண்டவர்களாய், விசுவாசத்தில் ஆழம்பெற்றவர்களாய், இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆவல் கொண்டவர்களாய் செயல்பட்டனர். தன் திருமணத்திற்குப் பின்னான அரசவை வாழ்வில் பல்வேறு வித்தியாசமான தேவைகள் இருந்தபோதிலும், புனித எலிசபெத் ஒருநாளும் தன் விசுவாசத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை. இவர் பெரிய விருந்துகளில் பங்குபெறுவதை விட, ஏழைகளுக்கு உணவூட்டுவதையும், ஆடம்பரமான உடைகளை உடுத்துவதை விட ஆடையற்றவர்களுக்கு உடுத்தக் கொடுப்பதையுமே விரும்பினார். இறைவனில் ஆழமான விசுவாசம் கொண்டிருந்த Ludwig ம் எலிசபெத்தும் தங்களின் ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். கணவரின் மரணத்திற்குப் பின் புனித எலிசபெத், தன் வாழ்வை ஏழைகளுக்கானப் பணிக்கெனச் செலவிட்டு, எப்போதும் தாழ்ச்சி நிரம்பிய மற்றும் கடினமான பணிகளையே ஆற்றினார். ஒரு துறவு சபையை நிறுவிய இவர், இளவயதிலேயே உயிரிழந்தாலும் அதுவரை தான் எடுத்த வார்த்தைப்பாடுகளைக் கடைபிடித்துச் செயல்பட்டு வந்தார். உயிரிழந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் புனிதராக அறிவிக்கப்பட்ட எலிசபெத், புனித ஃபிரான்சிசின் மூன்றாம் சபையின் பாதுகாவலியாக உள்ளார். ஏழைகள் மற்றும் உதவித்தேவைப்படுவோர் மீது இப்புனிதர் கொண்டிருந்த அர்ப்பணம், நம் அயலார் மீது நாம் கொண்டிருக்கும் கிறிஸ்துவின் மீதான அதே அன்பை மேலும் தூண்டுவதாக, எனத் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.