2010-10-20 13:09:19

அக்டோபர் 21 – நாளும் ஒரு நல்லெண்ணம்


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் சிலவற்றை இன்று காண்போம்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் எப்போதும் நம்மைக் காக்கும்.

எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். இலட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.

மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.

இச்சிந்தனைகளை நமக்கு வழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.








All the contents on this site are copyrighted ©.