2010-10-19 16:22:37

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆயர் மாமன்ற பிரதிநிதிகள் இத்தாலிய அரசு அதிகாரிகளைச் சந்தித்தனர்


அக். 19, 2010. மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆயர் மாமன்றம் வத்திக்கானில் இடம்பெற்றுவரும் இந்நாட்களில் அது குறித்து உரோம் மேயர் மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர் திருப்பீட அதிகாரிகள்.

உரோம் மாநகராட்சி தலைமையகத்தில் 'அமைதிக்கானப் பணியில் கிறிஸ்தவ சாட்சியம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் உரையாற்றிய இத்தாலிய வெளியுறவு அமைச்சர் ஃப்ராங்கோ ஃப்ரத்தினி, ஈராக், லெபனன் மற்றும் ஏனைய அரபு நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து கவலையை வெளியிட்டார். மத மோதல்களில் உயிரிழக்கும் 100பேரில் 75பேர் கிறிஸ்தவர்கள் என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் அண்மை அறிக்கை ஒன்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதே சந்திப்பின்போது தன் கருத்துக்களை வழங்கிய உரோம் நகர் மேயர் ஜியானி அலெமானோ, மத்தியகிழக்கு நாடுகளுக்கான அமைதிப்பாதையைக் குறித்து ஆயர் மாமன்றப் பிரதிநிதிகளின் மூலம் உரோம் அறிய விரும்புவதாலேயே இச்சந்திப்பு என்றார்.

இத்தாலிய அரசுப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஆயர் மாமன்றப் பிரதிநிதிகளுடன், உலக ஆயர் பேரவை பொதுச்செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச், திருப்பீடப்பத்திரிகைத்துறைத் தலைவர் இயேசு சபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி, புனித பூமிக்கான பொறுப்பாளர் குரு பியேர் பத்திஸ்தா பிட்ஸாபாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்







All the contents on this site are copyrighted ©.