2010-10-18 16:36:57

மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் இத்திங்கள் காலை நிகழ்வுகள்


அக்.18,2010. மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றம் வத்திக்கானில் இடம்பெறுவதன் நோக்கம், அது இடம் பெறும் விதம், இதுவரை காணப்பட்டுள்ள தீர்வுகள் என்பவை பற்றி அக்கூட்டத்தில் இத்திங்கள் காலை அறிக்கையைச் சமர்பித்தார், அந்த ஆயர் மாமன்றக் கூட்டத்தில் பங்கு பெறும் அலேக்சாந்திரியாவின் காப்டிக்ரீதி முதுபெரும் தலைவர் Antonios Naguib.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கத்தோலிக்கத் திருச்சபை, அங்கு கிறிஸ்தவர்களின் நிலை, அவர்களின் வரலாறு, சிறுபான்மையினராக அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களின் சமூகப் பங்களிப்பு என்பவைபற்றி இவ்வறிக்கையின் முதல் தொகுதியில் விவரித்த முதுபெரும் தலைவர், மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பின் கீழ் அப்பகுதியின் அரசியல் மோதல்கள், மத மற்றும் மனச்சான்றின் சுதந்திரம், கிறிஸ்தவர்களும் இக்காலத்திய இஸ்லாமும், மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் அங்கிருந்து குடிபெயர்தல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். தங்கள் தினசரி வாழ்வில் கிறிஸ்தவர்களின் பதிலுரை குறித்து முதல் தொகுதியின் மூன்றாம் பகுதியில் விவரித்தார் முதுபெரும் தலைவர் Naguib.

கிறிஸ்தவ சமூகங்களுக்கிடையேயான ஐக்கியம், அப்பகுதியில் கிறிஸ்தவ சாட்சியத்தின் தேவை, யூதர்களுடன் ஆன உறவு, இஸ்லாமியர்களுடன் உரையாடுதல், ஒன்றிணைந்து ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல், மத்தியக் கிழக்குக் கிறிஸ்தவர்களின் எதிர்காலம் போன்றவை குறித்த சிந்தனைகளையும் தன் அறிக்கை மூலம் இத்திங்கள் காலை ஆயர் மாமன்ற அமர்வில் சமர்ப்பித்தார் அலேக்சாந்திரியாவின் காப்டிக்ரீதி முதுபெரும் தலைவர் Antonios Naguib.








All the contents on this site are copyrighted ©.