2010-10-18 16:35:45

திருத்தந்தையின் ஞாயிறு மறையுரையும், மூவேளை ஜெப உரையும்


அக்.18,2010. இறைவனின் நன்மைத் தனத்தில் நம்பிக்கையற்றவர்கள் உண்மையான விதத்தில் ஜெபிக்க முடியாது என உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இறையடியார்கள் ஆறு பேரைத் திருச்சபையில் புனிதர்களாக அறிவித்த இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றியப் பாப்பிறை, சோர்வின்றி எப்போதும் செபிக்கவேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

இஞ்ஞாயிறு வாசகம் தந்த 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமை குறித்து தன் கருத்துக்களை வழங்கிய அவர், தொடர்ந்து நம் தேவைகளை வலியுறுத்தும் போது, அநீதியானவர்களே செவிசாய்க்கும்போது, நன்மைத் தனம் நிறைந்த இறைவன் நம் குரலுக்குச் செவி மடுக்காமல் இருப்பாரா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

பல வேளைகளில் நம் செபம் கேட்கப் படாததுபோல் தோன்றும்போது, நம் குறிக்கோள்களை அடைய உலக வழிகளைக் கைப்பற்றும் (பின்பற்றும்) சோதனைகள் வரலாம் என்பதையும் எடுத்தியம்பியத் திருத்தந்தை, நம்பிக்கையுடன் ஜெபத்தில் நிலைத்திருப்பதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.

இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையில் புதிய புனிதர்களின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகளைச் சுட்டிக் காட்டி, கடவுள் அன்பின் வாழும் எடுத்துக்காட்டுக்களான புனிதர்கள், இளையோரின் வழிகாட்டிகளாக இருப்பதோடு, கடவுள் அன்பை பறை சாற்றும் கருவிகளாகச் செயல்படும்படி அழைப்பும் விடுக்கிறார்கள் என்றார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.