2010-10-18 16:36:05

குருமட மாணவர்களுக்காக திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி


அக்.18,2010. தொழில் நுட்ப வல்லமை மற்றும் உலகமயமாக்கல் நிரம்பியிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் வாழும் நவீன மனிதர்கள் பலர், குருத்துவ பணி என்பது பழங்காலத்திற்குரிய பணி என கூறி வந்தாலும், இறைதேவை என்பது மக்களிடையே எக்காலத்திலும் இருந்து கொண்டேயிருக்கும் என குருமட மாணவர்களுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

குருக்களாக விரும்பும் எவரும் முதலில் கடவுளின் மனிதராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, குருவின் வாழ்வு முழுவதும் இறைவனுடன் ஆன தனிப்பட்ட உறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

திருநற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னம், ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவம், மக்களிடையே பிரபலமாயிருக்கும் பக்தி முயற்சிகள் போன்றவைகளை தன் செய்தியில் எடுத்தியம்பியுள்ள பாப்பிறை, குருமட மாணவர்களின் வாழ்வில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கூறியுள்ளார்.

சிறுவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஒரு சில குருக்களின் நடவடிக்கைகளால் இன்றைய உலகில் குருக்களின் புனிதத்துவம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டாலும், குருத்துவம் என்பது என்றும் மேலானதும் தூய்மையானதுமாகும் எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.