2010-10-15 16:06:24

மேலை நாடுகளில் கொண்டாடப்படும் Halloween என்ற நாளை மீண்டும் ஒரு கிறிஸ்தவத் திருவிழாவாக மாற்ற முயற்சிகள்


அக்.15,2010. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படும் Halloween என்ற நாளை மீண்டும் ஒரு கிறிஸ்தவத் திருவிழாவாக மாற்றும் முயற்சிகளைக் கத்தோலிக்கர்கள் மேற்கொள்ள வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.

நவம்பர் முதல் நாள் கொண்டாடப்படும் அனைத்து புனிதர்களின் திருநாளுக்கு முந்திய இரவு All Hallows Eve என்று வழங்கப்பட்டது. இதுவே, பிற்காலத்தில் மருவி, Halloween என்று பெயர்பெற்றது என்று கூறும் Damien Stayne என்பவர், Cor et Lumen Christi – அதாவது, கிறிஸ்துவின் இதயமும் ஒளியும் என்ற அமைப்பை நிறுவியவர்.

இந்த அமைப்பின் சார்பில் இவர் விடுத்துள்ள அழைப்பில், வருகிற நவம்பர் முதல் தேதி கொண்டாடப்படும் அனைத்துப் புனிதர்கள் விழாவின் திருவிழிப்பான அக்டோபர் 31 ஞாயிறன்று கத்தோலிக்கர்கள் தங்கள் வீட்டின் சன்னல்களில் விளக்குகளை ஏற்றி, கிறிஸ்துவே உலகின் ஒளி என்று பறைசாற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரிட்டனில் கத்தோலிக்க மறைபரப்பு மற்றும் மறைக் கல்வி பணிக் குழுவின் தலைவரான ஆயர் Kieren Conry, Halloween விழாவைக் குறித்து பேசுகையில், கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற கிறிஸ்தவ விழாக்களுக்கு அடுத்தபடியாக மக்களிடையே மிகவும் பிரபலமான Halloween பெரியதொரு வியாபார விழாவாக மாறியுள்ளது எனவே, அவ்விழாவின் உண்மையான பொருளை மக்கள் உணர்வது அவசியம் என்று கூறினார்.

விளக்குகளை ஏற்றி கிறிஸ்துவை அறிவிக்கும் இந்த முயற்சி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றாலும், இவ்வாண்டு இம்முயற்சி இங்கிலாந்து, வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் அவையின் ஆதரவுடன் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.