2010-10-15 16:10:59

அக்டோபர் 16. நாளும் ஒரு நல்லெண்ணம்


முத்திப்பேறுபெற்ற கமிலா பத்திஸ்தா வரானோ. முத்திப்பேறுபெற்றவராக திருவழிபாட்டுச் சடங்கு மூலம் இவர் என்றுமே அறிவிக்கப்பட்டதில்லை. இருப்பினும் அவர் மீது மக்கள் கொண்டிருந்த தனிப்பட்ட பக்தியைப் பார்த்து, அதாவது பல நூற்றாண்டுகளான பக்தி வழிபாடுகளைப் பார்த்து 1843ல் திருத்தந்தை 16ம் கிறகரி, கமிலா பத்திஸ்தா வரானோவை முத்திப்பேறுபெற்றவர் என அழைக்கலாம் என அறிவித்தார்.

1458ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ந்தேதி இத்தாலியின் கமரினோ எனுமிடத்தில் அரச குடும்பத்தில் பிறந்தவர் இவர். இறைவனின் பாடுகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியானித்து ஒரு சொட்டு கண்ணீராவது சிந்துவேன் எனச் சிறு வயதிலேயே, அதாவது 8 அல்லது 10 வயதிலேயே உறுதிப்பாடு எடுத்தவர் முத்திப்பேறுபெற்ற கமிலா பத்திஸ்தா வரானோ. 18 வயது முதல் 21 வயது வரை மூன்றாண்டுகள் இவரின் வாழ்வில் மிகப்பெரும் ஆன்மீகப் போராட்டம் இடம்பெற்றது. 1479ல் ஆன்மீக உள்ளொளி பெற்ற இவர், 1481ல் உர்பினோவின் ஏழை கிளாரா சகோதரிகள் என்ற துறவு மடத்தில் இணைந்து 1483ல் துறவற வார்த்தைப்பாட்டை எடுத்தார். இவர் வாழ்வின் நோக்கமே, இறைவனின் பாடுகளை அவரோடு இணைந்து அனுவிப்பதாகும். 1505ம் ஆண்டு இத்தாலியின் ஃபெர்மோ நகரில் கிளாரா இல்லம் ஒன்றைத் துவக்கும்படி திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸே முத்திப்பேறுபெற்ற கமிலா பத்திஸ்தா வரானோவைப் பணித்தார். இவரின் எழுத்துக்களுள் 'இதயத் தூய்மை' என்ற பகுதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 43 ஆண்டுகள் அடைபட்ட மடத்திலேயே இறைவனுடன் ஆன ஒன்றிப்பில் வாழ்ந்த இவர், தன் 66ம் வயதில் 1524ம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி காலமானார். இவரின் உடல் இன்றும் கமரினோவில் கிளாரா துறவு மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த முத்திப்பேறுபெற்ற கமிலா பத்திஸ்தா வரானோவை இஞ்ஞாயிறன்று, அதாவது அக்டோபர் 17ந் தேதியன்று புனிதராக அறிவிக்க உள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.