2010-10-15 16:03:15

33 சுரங்கத் தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதற்குச் சிலே ஆயர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்


அக்.15,2010. சிலே நாட்டின சான் ஹோசே தாமிரச் சுரங்கத்தில் கடந்த பத்து வாரங்களாகச் சிக்கித் தவித்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதற்குக் கடவுளுக்குத் தங்களது மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கும் மேய்ப்புப்பணி அறிக்கையை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

இந்த நீண்டகால மீட்புப்பணியின் போது சிலே நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மக்கள் மற்றும் உலகெங்குமுள்ள மக்களோடு சேர்ந்து தாங்களும் செபித்ததாகக் கூறும் ஆயர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்டின் சிறப்பு செபம் மற்றும் கரிசனைக்காக நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள், அவர்களின் உறவுகள், அரசு அதிகாரிகள், இன்னும் நாடெங்கிலும் மக்கள் கடவுளுக்கு நன்றி கூறுவதைப் பார்த்துத் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகச் சிலே ஆயர்கள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

சிலேயின் அடகாமா பாலைநிலத்திலுள்ள தங்க மற்றும் தாமிரச் சுரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சுமார் அரை மைல் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் முதலில் இறந்து விட்டதாகக் கருதப்பட்டது. ஆயினும் இவர்கள் உயிரோடு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மீட்புப்பணிகள் தொடங்கின. வருகிற டிசம்பர் இறுதியில் இவர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இம்மாதம் 13ம் தேதி இப்புதனன்று இவர்கள் மீட்கப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.