2010-10-14 16:11:06

பேரிடர்களின் அழிவுகளைக் குறைப்பது ஒவ்வொரு தனி மனிதரின் கடமை - ஐ.நா.பொதுச் செயலர்


அக்.14,2010. துரித கதியில் வளர்ந்து வரும் நமது பெரு நகரங்கள் இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்க எவ்வளவு தூரம் தயாராக உள்ளதென்ற கேள்வியை எழுப்பினார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலகப் பேரிடர்கள் குறைப்பு நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார்.

உலகில் பருவ நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் போல், மனித சமுதாயத்திலும் அதிகமானோர் நகரங்களை நாடும் மாற்றம் அதிகரித்து வருகிறதென்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஐ.நா.வின் தலைமைச் செயலர், நகரங்களில் மக்கள் அளவுக்கதிகமாய் கூடி வருவதால் ஒவ்வொரு இயற்கைப் பேரிடரிலும் அதிக உயிர்கள் பலியாகின்றன என்று கூறினார்.

நகரங்களை நாடி வருபவர்கள் அதிகமாக ஏழைகளாய் இருப்பதாலும், அவர்கள் தங்குமிடங்கள் பலமற்ற வகையில் அமைக்கப்படுவதாலும், இந்த விபத்துக்களில் பலியாவது பெரும்பாலும் ஏழைகளே என்று அவர் தன் கவலையை வெளியிட்டார்.

பேரிடர்களில் உண்டாகும் அழிவுகளைக் குறைப்பது அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதரின் கடமை என்று ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.