2010-10-14 16:06:10

சிலே நாட்டில் நிலத்தடி சுரங்கத்தில் அகப்பட்டிருந்த 33 தொழிலாளர்களும் மீட்பு – திருத்தந்தையின் செபங்களும் வாழ்த்துக்களும்


அக்.14,2010. சிலே நாட்டில் Atacama என்ற பகுதியில் 69 நாட்களாக நிலத்தடி சுரங்கத்தில் அகப்பட்டிருந்த 33 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு விட்டனர். இப்புதனன்று அதிகாலையில் முதல் தொழிலாளர் வெளியே கொண்டு வரப்பட்டார். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருவரென்ற விதத்தில் மேலே கொண்டுவரப்பட்ட இத்தொழிலாளர்களில் இறுதியானவர் இவ்வியாழன் அதிகாலையில் உள்ளூர் நேரம் 00:30 மணிக்கு மேலே கொண்டு வரப்பட்டார்.

சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித லாரன்ஸ் பெயரால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை தன் செபங்களையும் வாழ்த்துக்களையும் அனுப்பினார்.

இந்த விபத்தில் அகப்பட்டுக் கொண்ட தொழிலாளர்களுக்குத் திருத்தந்தை கடந்த மாதம் தன் கைப்பட அர்ச்சித்த செபமாலையை அனுப்பி வைத்தார். இத்தொழிலாளர்களும் தங்கள் கையொப்பம் இட்ட தங்கள் நாட்டுக் கொடியைத் திருத்தந்தைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவேற நாடு முழுவதிலும் திருவிழிப்புச் செபங்களும் உண்ணா நோன்புகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளை மேற்கொள்ளும்படி அழைப்பு விடுத்த சிலே நாட்டு ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் Alejandro Goic Karmelic இந்த மீட்புப் பணியானது சிலே நாட்டில் உயிர்ப்பின் வல்லமையைக் கூறும் ஒரு சாட்சி என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.