2010-10-14 16:12:08

இவ்வியாழன் அகில உலகப் பார்வை நாள்


அக்.14,2010. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழனன்று கடைபிடிக்கப்படும் அகில உலகப் பார்வை நாள் இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது.

அதிலும் சிறப்பாக இந்த வியாழனன்று ஆரம்பமாகும் "Countdown 2020" என்ற முயற்சியின் வழியாக, 2020ம் ஆண்டிற்குள் உலகில் பார்வைத் திறன் குறைவை முற்றிலும் அகற்றும் செயல்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

உலகில் இன்றைய நிலவரப்படி 18 கோடி பேர் பார்வைத் திறன் குறைந்தவர்கள். இவர்களில் 4 கோடியே 50 லட்சம் பேர் பார்வைத் திறனை முற்றிலும் இழந்தவர்கள் என்றும், இது குறித்து எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டால், இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்ந்துவிடும் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் WHO கூறியுள்ளது.

ஒவ்வொரு ஐந்து நொடிக்கு ஒருவர் இந்த உலகில் பார்வைத் திறனை இழக்கின்றார், ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை பார்வைத் திறனை இழக்கிறது எனவே, ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் பார்வைத் திறனை இழக்கின்றனர் என்று இந்த எண்ணிக்கையை விளக்கும் வகையில் WHO நிறுவனம் கூறுகிறது.

சரியான கவனத்துடன் செயல்பட்டால் பார்வைத் திறன் குறைவு என்பதை 80 விழுக்காடு குறைக்க முடியும் என்று கூறும் WHO நிறுவனம், குழந்தைப் பருவம் முதல் இக்குறைபாட்டை நீக்கும் வழிகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

மாணவர்களுக்கு பள்ளிக்கு சென்ற பின் தலைவலி ஏற்படுவது, படிக்கும்போதும், எழுதும்போதும் கண்ணில் நீர் வடிதல், வகுப்பறை கரும்பலகையில் எழுதியது சரியாக தெரியாது, கண்களைச் சுருக்கியோ, தலையைச் சாய்த்து பார்த்தாலோ கண் மருத்துவரிடம் சென்று ஆய்வு செய்து கண்ணாடி அணிய வேண்டும். மாணவர்கள் படிப்பில் மந்தமாக இருந்தாலும் பார்வை குறைபாடு இருக்கிறதா என ஆய்வு செய்வது நல்லது என இந்திய தேசிய கண் மருத்துவ சங்க துணைத் தலைவர் மற்றும் கண் பார்வை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வீராசாமி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.