2010-10-13 16:29:52

மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் நிகழ்ந்தவை


அக்.13,2010 முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் பகுதிகளில், கிறிஸ்தவர்கள் தங்கள் தனித்துவத்தை வாழ்ந்து காட்டுவது பெரியதொரு சவால் என்பது மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் இச்செவ்வாயன்று பேசப்பட்ட மையக் கருத்துக்களில் ஒன்று.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பல கொடுமைகளை சுட்டிக் காட்டிப் பேசிய சிரியாவின் அலெப்போ (Aleppo) உயர் மறைமாவட்டத்தின் ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati, இக்கொடுமைகளைக் கத்தோலிக்க உலகம் வெறும் பார்வையாளர்களாக இருந்து காண வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார்.
இச்செவ்வாயன்று நடந்த அமர்வுகளில் ஒவ்வொரு கண்டத்திலுமிருந்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் அறிக்கையைச் சமர்ப்பித்த Los Angeles உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Roger Mahony மத்தியக் கிழக்குப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள கத்தோலிக்கர்களின் நிலையைக் குறித்து விளக்கினார்.
கீழைரீதி சபைகளிலிருந்து அமெரிக்கா வரும் கத்தோலிக்கர்கள் தங்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு அமெரிக்காவில் உள்ள ஏனைய கத்தோலிக்கர்கள் உதவ வேண்டுமென்ற வேண்டுகோளையும் கர்தினால் Mahony விடுத்தார்.
மத்திய கிழக்குப் பகுதியைப் போலவே, ஆசியாவிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவான அளவே உள்ளதென்றும், அண்மைக் காலங்களில் மதங்களுக்கிடையேயான சகிப்புத் தன்மை குறைந்து வருவதால், கிறிஸ்தவர்கள் ஆசியாவின் பல பகுதிகளிலும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் பிலிப்பின்ஸ் பேராயர் Orlando Quevedo கூறினார்.மத்தியக் கிழக்குப் பகுதியில் உருவான விசுவாசமே ஐரோப்பாவின் விசுவாச வாழ்வுக்கு அடித்தளமாக இருக்கிறது என்று கூறிய ஹங்கேரி நாட்டின் Budapest பேராயர், கர்தினால் Peter Erdo, இந்த விசுவாசத்தை ஐரோப்பாவுக்கு வழங்கிய மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்கு ஐரோப்பா காட்டும் கரிசனையைக் குறித்து கேள்விகள் எழுப்பினார்.







All the contents on this site are copyrighted ©.