2010-10-13 16:40:23

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


அக் 13, 2010. இன்றைய நம் மறைபோதகத்தில், மத்திய காலத்தின் மறைஞானி, முத்திப்பேறுபெற்ற ஃபொலிஞ்ஞோவின் ஆஞ்சலா குறித்து நோக்குவோம் என தன் புதன் மறைபோதகத்தை துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஒரு மனைவியாகவும் தாயாகவும் இருந்தாலும் வாழ்வில் அதிக அக்கறையின்றி, ஒருகாலத்தில் இவர், இரந்துண்ணும் துறவிகளையும் ஏழ்மையைப் போற்றும் துறவறத்தாரையும் தரக்குறைவாக நோக்கினார். 1248ம் ஆண்டு பிறந்த ஆஞ்சலாவின் வாழ்வில், பின்னர் நடந்த சில சோகச் சம்பவங்களும் அவர் அனுபவித்த துன்பங்களும் அவரின் முக்கியமான மனமாற்றத்தை நோக்கி 1285ம் ஆண்டு வழிநடத்திச் சென்றன. தனக்குக் காட்சியளித்த புனித ஃபிரான்சிஸின் பரிந்துரையை வேண்டிய இவர், சான் ஃபெலிச்சானோ எனுமிடத்தில் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றார். இவரின் தாயும், கணவரும், குழந்தைகளும் உயிரிழந்தபின் தனக்குரியதை எல்லாம் விற்று புனித ஃபிரான்சிஸின் மூன்றாம் சபையில் இணைந்தார். இவர் 1309ம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார்.

முத்திப்பேறுபெற்ற ஃபோலிஞ்ஞோவின் ஆஞ்சலாவுடைய மனமாற்றம் குறித்த புத்தகமானது, நம் வாழ்விலும் இறைவனை நோக்கி திரும்பும் பாதையில் முக்கியமான வழிகளாக ஒறுத்தல், தாழ்ச்சி மற்றும் துன்பங்கள் உதவுவதைக் காட்டுகிறது. இப்புத்தகம் அவரின் மறையுண்மையான இறையனுபவங்களை விரிவாக எடுத்தியம்புகிறது. மேலும், இறைவனுடன் ஆழமான ஆன்மீக ஐக்கியத்தைக் கொண்டிருந்த இவர் தன் இறையனுபவங்களை எழுத்தில் வடிப்பதில் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதும் புரிகிறது. முத்திப்பேறுபெற்ற ஆஞ்சலாவின் பாவம் மற்றும் தண்டனை குறித்த பயமானது, இறையன்பில் அவர் வளர்ந்ததன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அவர் சிலுவையின் பாதை வழியாக அன்பின் பாதை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்.

'என் இறைவா, மிக மேலான மறையுண்மையை அறிந்துகொள்ளும் தகுதியுடையவளாக என்னை மாற்றியருளும். அதுவே உம் உறுதியான, மிக உன்னத அன்பு' என்று தந்தையாம் இறைவனை நோக்கிய அவர் எழுப்பிய ஜெபத்தில் நாமும் பங்கு கொள்வோம் என அழைப்பு விடுத்த திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.