2010-10-13 16:30:47

சுரங்க விபத்தில் சிக்கியிருந்த சிலே நாட்டுத் தொழிலாளர்கள் மீட்பு


அக்.13,2010 சிலே நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து பூமிக்கடியில் சிக்கியிருந்த 33 தொழிலாளர்களை மீட்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இப்புதனன்று சிலே நாட்டின் உள்ளூர் நேரம் நடு இரவைத் தாண்டி பத்து நிமிடங்களுக்கு இந்தத் தொழிலாளர்களின் குழுவிலிருந்து முதலாவதாக Florencio Avalos என்பவர் வெளியேறினார்.
இச்செவ்வாய் இரவு இப்பணிகள் ஆரம்பமானதிலிருந்து சிலே நாட்டின் பல கோவில்களில் முழு இரவு கண்விழிப்புச் செபங்கள் நடைபெற்றன.
68 நாட்களாக இந்த சுரங்க விபத்தில் அகப்பட்டிருக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித தடங்கலும் இன்றி வெளியேற்றப்பட வேண்டுமென அனைவரும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார் சிலே ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Alejandro Goic Karmelic.
சுரங்கத் தொழிலாளர்கள் ஒவ்வொருவராய் வெளியேற ஆரம்பித்ததும் அவ்விடத்திற்கு வந்த சிலே நாட்டு அரசுத் தலைவர் Sebastian Pinera, இந்த முயற்சியை ஒரு அற்புத நிகழ்வென்று கூறினார்.Phoenix என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு சிறப்பு கருவியின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என்று இத்தொழிலாளர்கள் மேலே வரத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி இப்புதன், வியாழன் ஆகிய இருதினங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.