2010-10-13 16:37:25

அக்டோபர் 14 – நாளும் ஒரு நல்லெண்ணம்


போலந்து நாட்டில் 1433ம் ஆண்டு பிறந்து 1489ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த ஒரு துறவியைப் பற்றி இன்று பேசுவோம். ஆம். 6 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாலும் நம் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் வாழ்க்கையில் நல்ல ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவர் இக்குரு. அவர் பெயர் தான் முத்திப்பேறுபெற்ற தனிஸ்லாஸ் சோல்திஸ் கசிமியேர்சிக். போலந்தின் க்ராக்கோவ் பல்கலைக்கழகத்தில் மெய்யியலிலும் இறையியலிலும் முனைவர் பட்டம் பெற்ற இத்துறவி, தன் வாழ்வை அர்ப்பணித்தது திருநற்கருணை பக்திக்கும் ஏழைகள் மற்றும் நோயாளிகள் மீதான அக்கறைக்குமே. தான் சார்ந்திருந்த துறவு இல்லத்தில் இல்ல அதிபராகவும் நவதுறவியர் தலைவராகவும் பணியாற்றினாலும் மிகச்சிறந்த போதகராகவும் மக்களுக்கு வழிகாட்டுவதில் பிரபலமானவராகவும், ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றுவதில் பேரார்வமுடையவராகவும் செயலாற்றினார். இவ்வுலக வாழ்வை புனிதத்துவத்திற்கான ஒரு போராட்டமாகவே பார்த்த அவரை அவர் காலத்து மக்கள் ஒரு வாழும் புனிதராகவே கண்டனர். 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ந் தேதி முத்திப்பேறுப்பெற்றவராக திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலால் அறிவிக்கப்பட்ட துறவி தனிஸ்லாஸ் சோல்திஸ் கசிமியேர்சிக், வரும் ஞாயிறன்று புனிதராக திருத்தந்தை 16ம் பெனடிக்டால் அறிவிக்கப்படவுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.