2010-10-12 16:16:14

விவிலியத் தேடல்


RealAudioMP3
"அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் மூன்றாம் வரியில் நம் சிந்தனைகளை ஆரம்பிக்கிறோம்.

மனிதர்களின் தோற்றத்தை, குணத்தை வர்ணிப்பதற்கு நாம் அடிக்கடி மிருகங்களைப் பயன் படுத்துகிறோம். மாடு மாதிரி உழைப்பவர்கள், நரி போல் தந்திரம் மிக்கவர்கள், புலியைப் போல் வீரம் உள்ளவர்கள், யானையைப் போல, எலியைப் போல, கிளியைப் போல, மானைப் போல, மயிலைப் போல... என்றெல்லாம் பல உருவகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த உருவகங்களில் ஆடுகளுக்கும் இடம் இருக்கிறதா? இருக்கிறது. கள்ளம், கபடமற்ற, ஒரு பாவமும் அறியாத, அப்பாவியான மனிதர்களைச் செம்மறியாட்டிற்கு ஒப்புமையாகச் சொல்கிறோம். இந்த அடிப்படையில் தானே இறைமகன் இயேசுவையே நாம் ஒரு செம்மறி என்று கூறுகிறோம்.
இஸ்ராயலர்கள் வாழ்வில் ஆடுகளுக்கு, செம்மறி ஆடுகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. பலிகளுக்கென, பாவப் பரிகாரத்திற்கென ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. இஸ்ராயலர்கள் மத்தியில் 'Yom Kippur' என்ற பாவக் கழுவாய் நிறைவேற்றப்படும் நாள் கடைபிடிக்கப்பட்டது. அந்த நாளன்று இஸ்ராயேல் மக்களின் பாவங்களைப் போக்க ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. இதனை விவரிக்கும் லேவியர் நூலின் பகுதியைக் கேட்போம்.

லேவியர் நூல் 16 : 5 - 10
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும். ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும். ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும். ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும். போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும். 
பாலை நிலங்களுக்குத் துரத்தி விடப்படும் ஆடுகள் திரும்பி வருவதில்லை. திரும்பி வரத் தெரியாது. அவ்வளவு அப்பாவிகள் அவை. ஒரு நாய் குட்டியையோ, பூனைக் குட்டியையோ வேறு இடத்தில் விட்டு விட்டு வந்தால், அவை திரும்பி வருவதுண்டு. அதே போல், புறாக்களும் பல இடங்களில் சுற்றிப் பறந்தாலும் மீண்டும் கூடு திரும்பிவிடும். திசை அறிந்து, பழகிய இடத்திற்கே திரும்பக் கூடிய திறமை பல மிருகங்கள், பறவைகளுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மறி ஆடுகளுக்கு, பாவம், இந்தத் திறமை இல்லாததால், அவை வழிமாறிச் செல்லக்கூடிய, காணாமல் போகக்கூடிய வாய்ப்புக்கள் ஆயிரம் உண்டு.

இப்படி வழி தெரியாமல் தவிக்கும், எளிதில் ஏமாறிவிடும், அப்பாவி ஆடுகளுக்கு ஆயன் அவசியம். அதுவும் பசும் புல் வெளியில் அவைகளுக்கு உணவளித்து, இளைப்பாறுதலையும் அளித்து, அமைதியான நீர்நிலைகளில் அவைகளின் தாகத்தைத் தணிக்கச் செய்யும் ஆயன் அவசியம். பசியும், தாகமும் தீர்ந்து, இளைப்பாறுதலும் அடையும் ஆடுகள் புத்துயிர் பெறுவதைத் தான் திருப்பாடல் 23ன் ஆசிரியர் மூன்றாம் வரியில் சொல்கிறார்: "அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்." ஆங்கிலத்தில் இந்த வரி: "He restores my soul". "என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்." என்பது இதன் பொருள். புத்துயிர் அளிப்பது... ஆன்மாவை மீண்டும் அளிப்பது... பற்றி சிந்திக்கலாம்.

புத்துயிர் பெறுவதென்றால், புத்துணர்ச்சி பெறுவதா? மறு மலர்ச்சி அடைவதா? புத்துணர்வு, மறுமலர்ச்சி இவைகளைத் தருவதற்கு எத்தனையோ மந்திர வித்தைகளை இன்றைய விளம்பர, வியாபார உலகம் காட்டுகிறது.
தூக்க கலக்கத்துடன் பல் துலக்க வருவான் ஓர் இளைஞன். அவன் வாயில் ஒரு குறிப்பிட்ட பற்பசை பட்டதும்... அவனைச் சுற்றி உலகமே விழித்து எழும், பூக்களெல்லாம் அவனைப் பார்த்து கண் சிமிட்டும், அவன் மீது பூமழை பொழியும், பட்டாம் பூச்சிகள் அவனைச் சுற்றிலும் பறக்கும்... அப்பப்பா, இந்த உலகமே அட்டகாசமாய்த் ஆர்ப்பரிக்கும். அத்தனை மந்திர சக்தி படைத்தது அந்த பற்பசை என்று முழங்கும் அந்த விளம்பரம்.
இன்னொரு விளம்பரத்தில் உழைத்து, களைத்து அப்பா அலுவலகத்திலிருந்து திரும்புவார். அவரது ஐந்து வயது மகன் அவரை விளையாட அழைப்பான். அப்பா சக்தி எல்லாம் இழந்து சோபாவில் துவண்டு விழுவார். அந்நேரம் அம்மாவுக்கு ஓர் எண்ணம் பிறக்கும் அவர் சென்று ஒரு குறிப்பிட்ட பழ ரசத்தை எடுத்து வருவார். அல்லது ஒரு குறிப்பிட்ட தேநீரைக் கொடுப்பார். அதைக் குடித்ததும்... அப்பா சூப்பர்மேன் ஆவார். அப்பாவும் குழந்தையாய் மாறி அங்கு ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்...
அன்புள்ளங்களே, வியாபார உலகம், விளம்பர உலகம் தரும் புத்துயிர், அந்த உலகம் தரும் ஆன்மா இதுதான். இது போன்ற வித்தைகள், சுருக்கு வழிகள், நொடிப் பொழுது தீர்வுகள், இவைகள் விளம்பரங்களில் சாத்தியம். உண்மை வாழ்க்கையில் கதையே வேறு. இது போன்ற விளம்பரங்களால் வரும் ஆபத்து என்னவென்றால், வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமே ஒரு நொடியில், ஒரு பொருளால் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை இந்த விளம்பரங்கள் மனதில் உண்டாக்கி விடுகின்றன.
சிறு வயதில் கதைகளில் கேட்ட அற்புத விளக்கு, மந்திரக் கோல், பறக்கும் கம்பளம் இவைகள் செய்த வித்தைகளை இக்காலத்து பற்பசை, ஷாம்பூ, குளிர்பானங்கள் செய்கின்றன. இந்த உலகம் தரும் புத்துணர்வு, புத்துயிர், ஆன்மா இவைகளுக்கும் திருப்பாடலின் ஆசிரியர் சொல்லும் புத்துயிர், ஆன்மா இவைகளுக்கும் வேறுபாடுகள் ஏராளம். "என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்." என்ற வரியில் உள்ள ஆழம் மிக அதிகம்.

எபிரேய மொழியில் ஆன்மாவைக் குறிக்க "Nephesh" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் பழைய ஏற்பாட்டில் மட்டும் 754 முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எபிரேயச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Life, Spirit, Soul என்று பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழிலும் ஆவி, ஆன்மா, உயிர் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Nephesh என்ற சொல்லுக்கு மிக நெருங்கிய சொல் "மூச்சு" - "Breath". விவிலியத்தில் இந்தச் சொல் தொடக்க நூலில் முதல் இரு அதிகாரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்க நூல் 1: 2
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 
இரண்டாம் அதிகாரத்தில் மனிதனைப் படைக்கும் போது, இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதப் படைப்பில் ஓர் அழகிய எண்ணம் இந்த அதிகாரத்தில் வெளியாகிறது. உலகமனைத்தையும், எல்லா உயிரினங்களையும் கடவுள் படைத்ததற்கும் மனிதனைப் படைத்ததற்கும் பெரும் வேறுபாடு உண்டு. எல்லாவற்றையும் தன் ஒரு சொல்லால் படைக்கிறார் கடவுள். "உண்டாகட்டும்" என்று அவர் சொன்னதும் அவை உண்டாயின. மனிதனைப் படைக்கும் போது என்ன நடந்தது? இதோ தொடக்க நூலின் வரிகள்:
தொடக்க நூல் 2: 7
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். 
மனிதனைப் படைக்க இறைவன் தனி முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அதோடு கூட தன் மூச்சுக் காற்றையும் கொடுக்க வேண்டியிருந்தது. துவக்கத்தில் நீர்த்திரளின் மீது அசைந்தாடிய ஆவியைக் குறிப்பிடும் போதும், கடவுள் மனிதன் மீது ஊதிய மூச்சுக் காற்றைக் குறிப்பிடும் போதும் 'Nephesh' என்ற எபிரேயச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே சொல் திருப்பாடல் 23ன் மூன்றாம் வரியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனக்குப் புத்துயிர் அளிப்பார்... ஆன்மாவை எனக்களிப்பார் என்று ஆசிரியர் கூறும்போது, மீண்டும் தான் புதுவிதமாய் படைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை, வேண்டுதலைத் தெரிவிக்கிறார்.

உலகில் மிகவும் பிரபலமான ஒரு குளிர் பான நிறுவனம் 2009ம் ஆண்டிலும் இவ்வாண்டிலும் புதியதொரு விளம்பர வரிசையை ஆரம்பித்தது. அந்த வரிசையின் மையக் கருத்து: "Every generation refreshes the world. Now it's your turn." அதாவது, “ஒவ்வொரு தலைமுறையும் உலகத்தைப் புதுப்பிக்கிறது. இப்போது, உங்கள் முறை.”
இந்தக் குளிர் பான நிறுவனமும் வேறொரு குளிர் பான நிறுவனமும் உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் அல்லது நதி நீர் அதிகம் உள்ள பகுதிகளில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து, அப்பகுதியில் உள்ள தண்ணீரை எல்லாம் முற்றிலும் உறுஞ்சி எடுத்து விட்டு, அப்பகுதியை ஒரு பாலை நிலமாக மாற்றி விட்டு, வேறொரு இடத்திற்குத் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கச் சென்றுவிடுவார்கள்.
உலகை இவ்வளவு தூரம் பாழடையச் செய்யும் இவர்கள் உலகத்தைப் புதுப்பிப்பதைப் பற்றி பேசுவது வேதனையாக உள்ளது. அவர்களது புதுப்பிக்கும் சக்தியை நம்பி, மக்கள், சிறப்பாக இளையோர் இன்னும் இந்தப் பானங்களை ஆதரிப்பதைப் பார்க்கும் போது வேதனை இன்னும் அதிகமாகிறது. இவர்கள் உருவாக்கிய பாலை வனங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற துணிச்சலில் இந்த விளம்பர வரிகளைச் சொல்கிறார்கள்.
 உலகத்தை, இயற்கையை, ஒவ்வொரு தலைமுறையை, தனிப்பட்ட மனிதர்களை, அவர்களது உயிரை, ஆன்மாவைப் புதுப்பிக்க வல்லவர், புத்துயிர் ஊட்ட வல்லவர் ஆயனாம் இறைவன் ஒருவரே. "அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்." "He restores my soul". "என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்."







All the contents on this site are copyrighted ©.