2010-10-11 16:38:15

மத்திய கிழக்குப் பகுதிக்கான ஆயர் மாமன்றத்தை அன்னைமரியிடம் அர்ப்பணித்தார் திருத்தந்தை


அக்.11,2010. மத்திய கிழக்குப் பகுதி நற்செய்திக்குச் சான்று பகர்வதிலும் ஐக்கியத்திலும் வளருவதற்கு அன்னைமரியிடம் செபிப்போம் என்று ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

வத்திக்கான் பேதுரு வளாகத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளிடம் இவ்வாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, அப்பகுதியில் ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவின் அடையாளமும் கருவியுமாகத் திகழத் திருச்சபை அழைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

செபமாலை மாதம் என்றழைக்கப்படும் இந்த அக்டோபர் மாதத்தில் செபமாலை செபிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாம் எப்பொழுதும் மரியன்னையால் வழிநடத்தப்பட நம்மைக் கையளிப்போம் என்று கூறினார்.

துன்பச் சூழல்களில் வாழும் மத்திய கிழக்குப் பகுதிக் கிறிஸ்தவர்கள் சோர்வடையாமல், மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளால் ஊக்கம் பெறுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.