2010-10-11 16:58:29

இரண்டு வார இந்திய பயணத்தை ஆரம்பித்துள்ளார் கான்டர்பரி பேராயர்.


அக்.11,2010. கான்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ் இரண்டு வார இந்திய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள முத்திபேறு பெற்ற அன்னை தெரேசாவின் கல்லறையைப் பார்வையிட்டதிலிருந்து இந்தப் பயணத்தை பேராயர் ஆரம்பித்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அரச குடும்பத்திற்கு அடுத்தபடியாக உயர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியாக விளங்கும் பேராயர் வில்லியம்ஸ், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பரபரப்பை உண்டாக்கி வந்த அயோத்தி பிரச்சனை குறித்தத் தகவல்களைப் பின்பற்றி வந்தார் எனத் தெரிகிறது.

அயோத்தி பிரச்சனை குறித்து நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டதும், அதனால் கலவரங்கள் உருவாகும் என்று சொல்லப்பட்டு வந்ததற்கு மாறாக மக்களின் நடத்தை அமைந்ததும் தனக்கு பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று பேராயர் வில்லியம்ஸ் கூறினார்.

அன்னை தெரேசாவின் அருள்சகோதரிகள் நடத்தும் சிசு பவன் என்ற குழந்தைகள் இல்லத்தில் நேரம் செலவழித்த பேராயர் ரோவன் வில்லியம்ஸ், அங்கு தான் கண்டவைகள் அனைத்தும் தன்னைப் பெரிதும் பாதித்ததாகவும், மனுக்குல சேவைக்கு இந்த இல்லம் ஒரு இலக்கணமாக உள்ளதெனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.