2010-10-08 16:28:41

மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தில் முஸ்லீம் பிரமுகர்கள் பங்கேற்பு


அக்.08,2010. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாடுகளில் அவர்களின் துயர்கள் களையப்பட்டு மக்கள் மத்தியில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தில் முஸ்லீம் மற்றும் யூதப் பிரமுகர்கள் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வத்திக்கானில் இஞ்ஞாயிறன்று தொடங்கும் இந்த ஆயர் மாமன்றத்தில் லெபனன் குடி்யரசின் முஸ்லீம் அரசியல் ஆலோசகர் Muhammad AL-SAMMAK, ஈரானின் தெஹ்ரான் (Teheran) அறிவியல் கழகத்தின் உறுப்பினரும், Shahid Beheshti பல்கலைக்கழகச் சட்டவியல் துறையின் பேராசிரியருமான Ayatollah Seyed Mostafa MOHAGHEGH AHMADABADI என்பவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க-யூதக் கமிட்டியின் பல்சமய விவகாரத்துறை மற்றும் இஸ்ரேல் Heilbrunn சர்வதேச பல்சமய நிறுவனத்தின் இயக்குனருமான ராபி David ROSEN ம் யூத மதத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அக்டோபர் 10 முதல் 24 வரை நடைபெறும் ஆயர் மாமன்றம் குறித்து இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய ஆயர் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் Nikola Eterović இத்தகவல்களை வெளியிட்டார்.

மேலும், இம்மாமன்றத்தில் 185 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். மத்திய கிழக்கு என்பது, எருசலேம், பாலஸ்தீனம் தவிர சவுதி அரேபியா, பாஹ்ரெய்ன், சைப்ரஸ், எகிப்து, அரபு ஐக்கிய குடியரசுகள், ஜோர்டன், ஈரான், ஈராக்,இஸ்ரேல், குவைத், லெபனன், ஓமன் கத்தார், துருக்கி, சிரியா ஏமன் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கும். இப்பகுதியில் வாழும் 35 கோடியே 61 இலட்சத்து 74 ஆயிரம் மக்களில் 57 இலட்சத்து ஏழாயிரம் பேர் கத்தோலிக்கர் என்றும் பேராயர் Eterović கூறினார்.







All the contents on this site are copyrighted ©.