2010-10-06 16:46:55

தென் கொரியாவின் மதத் துறவிகள் நூறு பேருக்கும் மேல் அரசுத் தலைவரின் மாளிகை முன் உண்ணா நோன்பு போராட்டம்


அக்.06, 2010 தென் கொரியாவில் நான்கு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அரசுத் தலைவர் தொடர்ந்து ஆதரவு அளித்தால், அவர் பதவி விலக வேண்டும் என்று மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுச் சூழலுக்கும், குடிநீர் தேவைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் நான்கு நதி இணைப்புத் திட்டத்தைக் கத்தோலிக்க, கிறிஸ்தவ, புத்த மதத் தலைவர்கள் கடந்த சில மாதங்களாக வன்மையாக எதிர்த்து வருகின்றனர்.

இத்திங்கள் முதல் புதன்வரை கொரியாவின் மதத் துறவிகள் நூறு பேருக்கும் மேல் அரசுத் தலைவரின் மாளிகை முன் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மதத் தலைவர்கள் அரசுத் தலைவரின் பதவி விலகலை வலியுறுத்தினர்.

இயற்கையையும், வாழ்வையும் பேணிகாக்கும் எல்லா மதங்களையும் இழிவு படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் இந்த நான்கு நதிகள் இணைப்புத் திட்டம் மனித குலத்தையும் இழிவுபடுத்துகிறது என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தென் கொரியாவின் சமய வரலாற்றில் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது இதவே முதல் முறை என்று கத்தோலிக்க ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் Maeng Joo-hyung கூறினார்.

அரசின் இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் Hyundai, Samsung, Daewoo போன்ற பெரும் வணிக நிறுவனங்களை மக்கள் இனி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மதத்தலைவர்கள் முன் வைத்துள்ளனர்.

தென் கொரிய அரசு நான்கு நதித் திட்டத்தை 2008ம் ஆண்டு முன் வைத்தபோதே, Incheon மறை மாவட்டம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.