2010-10-06 16:32:23

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


அக்.06,2010. வானம் பளிச்செனத் திறந்திருக்க இப்புதன் அதிகாலையிலேயே பயணிகள் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திற்குச் செல்வதற்காகக் காத்து நின்றனர். இவ்வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானப் பலநாடுகளின் திருப்பயணிகளுக்குத் தனது புதன் பொது மறைபோதகத்தை காலை 10.30 மணிக்குத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனித பெரிய ஜெட்ரூட் (Gertrude) குறித்து இப்போதகத்தில் விளக்கினார். இப்புனிதர், துறவு இலக்கியத்தின் பல தலைசிறந்த நூல்களின் பிறப்பிடமாக விளங்கும் Helfta ஆதீனத்தோடு தொடர்புடையவர். இந்தப் புகழ்பெற்றப் புனித பெரிய ஜெட்ரூட் பற்றி இன்றைய நமது மறைக்கல்விப் போதகத்தில் பார்ப்போம் என ஆங்கிலத்திலானச் சிறிய உரையைத் தொடங்கினார் திருத்தந்தை.

RealAudioMP3 புனித ஜெட்ரூட் மட்டுமே, ஜெர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களில் “பெரிய” என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பெண்ணாவார். “பெரிய” என்று கொடுக்கப்பட்ட இந்தக் கௌரவமானது, அப்புனிதரின் அசாதாரண இயல்புக்கும், தெய்வீக ஆற்றலைக் காட்டும் கொடைகளுக்குமென வழங்கப்பட்டதாகும். ஜெட்ரூட் இளைஞியாக இருந்த போது அறிவும் வல்லமையும் தீர்மானிக்கும் ஆற்றல் உள்ளவராகவும், அதேசமயம் திடீர் உள்தூண்டுதலுக்கு உள்ளாகக்கூடியவராகவும் இருந்தார். மிகவும் தாழ்மையோடு பிறரது ஆலோசனைகளைக் கேட்பார், அத்துடன் செபிக்குமாறும் கேட்பார். அதேநேரம் தன்னில் மிக ஆழமான மாற்றத்தை அனுபவித்தார். படிக்கும் போது உலகநோக்குடைய கல்வியிலிருந்து இறையியல் கல்வியில் நாட்டம் கொண்டார். தனது துறவு வாழ்வில் உலகப் பொருட்களில் கவனம் செலுத்தாது ஆழமானச் செபத்தில் ஒன்றித்தார். இவர் தனது எழுத்துக்களில், விசுவாசத்தின் உண்மைகளைத் தெளிவு மற்றும் எளிமையோடு விளக்கும் வழிகளில் முனைந்தார். அதேசமயம், இறையன்போடு தொடர்புடைய ஆன்மீகக் கருத்துக்கள் பற்றி விவரிக்கத் தவறவில்லை. இவர் தனது துறவு வாழ்வில் கடவுளுக்கு முழுவதும் தன்னைக் கையளித்து பக்தியுடன் செபித்தார். கிறிஸ்துவையும் அவரது திருச்சபையையும் தாழ்ச்சி மற்றும் விசுவாசத்தோடு எவ்வாறு அன்பு செய்வது என்பதையும் திருப்பலியிலும் திருவழிபாட்டிலும் உள்ளார்ந்து பங்கு கொள்வதன் வழியாகத் தனிச்செபத்தில் வளர்வதையும் அன்பு நண்பர்களே, புனித பெரிய ஜெட்ரூட்டமிருந்து கற்றுக் கொள்வோம். RealAudioMP3 இவ்வாறு இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்தத் திருத்தந்தை திருப்பயணிகளை வாழ்த்தி எல்லாருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.