2010-10-06 16:43:40

ஜெனீவாவில் நடைபெற்று வரும் UNHCR கூட்டத்தில் பேராயர் சில்வானோ தொமாசி


அக்.06, 2010 அகில உலகில் அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓரளவு நல்ல நிலையை அடைந்திருந்தாலும், இன்னும் இந்த விடயத்தில் மாபெரும் முன்னேற்றம் தேவைப்படுகிறதென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் அகதிகளுக்கான ஐ.நா.வின் மேல்மட்ட அவை (UNHCR)யின் 61வது கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, இக்கூட்டத்தில் இச்செவ்வாயன்று பேசுகையில் இவ்வாறு கூறினார்.

அகதிகளுக்கான ஐ.நா.ஒப்பந்தம் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் இவ்வேளையில், இந்த அறுபது ஆண்டுகளில் ஐ.நா.எடுத்து வரும் அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் பாராட்டுகிறதெனக் கூறினார் பேராயர் தொமாசி. அகதிகளின் நிலையை உயர்த்த உலக நாடுகளின் ஒவ்வொரு அரசும், பன்னாட்டு அமைப்புகளும் இன்னும் தீவிரமாக பாடுபட வேண்டுமெனவும் பேராயர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு ஹெயிட்டி நில நடுக்கம், மற்றும் பாகிஸ்தான் பெரு வெள்ளம் என்ற இரு இயற்கைப் பேரிடர்களினால் புலம் பெயர்ந்தோருக்கு அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர் குழு (UNHCR) பெருமளவில் உதவியதை பேராயர் சில்வானோ தொமாசி தன் உரையில் நினைவு கூர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.