2010-10-06 16:45:57

இலங்கை மடு மாதாத் திருத்தலத்தில் பல ஆயிரம் பக்தர்கள்


அக்.06, 2010 இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும் மடு மாதாத் திருத்தலத் திருநாள் இவ்வாண்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும், பல ஆயிரம் பக்தர்கள் திருத்தலத்திற்கு வந்திருந்தனர்.

வறட்சி, தண்ணீர் பற்றாக் குறை காரணமாக இந்த ஆண்டு மடு மாதாக் கொண்டாட்டங்களை தலத் திருச்சபை இரத்து செய்திருந்தது. இது குறித்து மக்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருத்தலத்திற்கு வந்திருந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன.

திருநாள் செபங்கள், திருப்பலி என்று எதுவும் அதிகாரப்பூர்வமாய் நடைபெறவில்லை என்றாலும், அன்னை மரியாவின் மீது மக்களின் பக்தி போற்றும்படியாக உள்ளதென மன்னார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்தந்தை விக்டர் சூசை கூறினார்.

இப்பகுதியில் வாழும் மக்கள் இன்னும் நிலையான உறைவிடங்களும் நிலையான வேலைகளும் இல்லாமல் தவிக்கின்றனர் என்றும், அரசு தரும் உதவிகளுடன் காரித்தாஸ் செய்து வரும் உதவிகளும் இம்மக்களைப் பெரிதும் காத்து வருகின்றன என்று அருள்தந்தை சூசை மேலும் கூறினார்.

உள்நாட்டுப் போரின் போது, மடு மாதாத் திருத்தலம் பல முறை தாக்கப்பட்டதும், போர் முடிந்து அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அகற்றிய பின்னரே அந்தத் திருத்தலம் மக்களுக்குத் திறக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.