2010-10-06 16:33:25

அக்டோபர் 07 நாளும் ஒரு நல்லெண்ணம்


இத்தாலியின் பிரிந்திசி நகரில் 1841ம் ஆண்டு பிறந்த பர்த்தோலோ லோங்கோ என்பவர் வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆவலில் வளர்ந்தார். ஆனால் எப்படியோ இவர் பில்லி சூனியம் போன்ற தீய வலைகளில் சிக்கி சாத்தானுக்குப் பணிவிடை செய்யும் குருவாக மாறினார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்து வந்தாலும் வின்சென்த்தே பேப்பே என்ற அவரது நெருங்கிய நண்பரின் செபத்தால் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தழுவினார். தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாக அதுமுதல் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்து வந்தார். 1872ம் ஆண்டு அக்டோபரில் வியாபாரம் விடயமாக போம்பெய் சென்றார். அச்சமயம் திடீரென மீண்டும் அந்தப் பழைய சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டார். நரகத்தின் நெருப்புச்சுடர் அவருக்காகக் காத்திருப்பதாக உணர்ந்தார். இந்த மாதிரி இவர் மனது குழம்பி இருந்த அந்த நேரத்தில் அவருடன் இருந்த தொமினிக்கன் சபை குரு ஆல்பெர்த்தோ ரதென்த்தே, புனித தொமினிக்குக்கு அன்னைமரியா சொன்ன, “எனது செபமாலை பக்தியைப் பரப்புபவர்கள் காப்பாற்றப்படுவார்கள்” என்ற வார்த்தைகளை எடுத்துச் சொன்னார். இவ்வார்த்தைகள் பர்த்தோலோவுக்கு உள்அமைதியைக் கொடுத்தன. அந்த இடத்திலேயே முழந்தாள்படியிட்டு அன்னைமரியாவின் விண்ணப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார். அதேநேரம் போம்பெய் ஆலய மணி மூவேளை செபத்துக்காக ஒலித்தது. இந்த மணி சப்தம் அவர் மரியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதி செய்வதாக இருந்தது. இவர் செபமாலை அன்னைக்கு ஆலயம் கட்டிச் செபமாலை பக்தியைப் பரப்பினார். இத்தாலியின் போம்பெய் செபமாலை அன்னை ஆலய வரலாறும் இவரிலிருந்து பிறக்கின்றது.

அக்டோபர் 7 செபமாலை அன்னை திருவிழா. எதற்கெடுத்தாலும் ஆயுதம் தூக்குகின்ற இக்காலத்தில் செபமாலை என்ற ஆயுதத்தைத் தூக்குகின்றவர்கள் ஒருபோதும் சோடை போவதில்லை. சிக்கல் என்று வந்தால் செபமாலையுடன் மரியன்னையின் முன்னர் மண்டியிடுவோம்.







All the contents on this site are copyrighted ©.