2010-10-05 15:43:47

சமூகப்பணியாற்றும் இத்தாலியக்குரு ஒருவரைப்பற்றிய பங்களாதேஷ் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


அக்.05,2010. 1953ஆம் ஆண்டு முதல் பங்களாதேசில் பணியாற்றி வரும் இத்தாலியக் குரு ஒருவரைக்குறித்து 80 நிமிட ஆவணப்படம் ஒன்றை எடுத்து கௌரவித்துள்ளது அந்நாடு.

'குரு மரினோ ரிகோன் : வெனிஸ் முதல் சுந்தர்பான்ஸ் வரை' என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பங்களாதேசில் அவர் ஆற்றிவரும் சமூக மேம்பாட்டுப்பணிகளைக் குறித்து எடுத்தியம்புகிறது. பங்களாதேசின் குல்னா மற்றும் Bagerhat பகுதிகளில் 50 பள்ளிகளையும் தையற்பயிற்சிக் கூடங்களையும் கட்டி ஏழைகளுக்கு உதவி வரும் இக்குரு 1971ஆம் ஆண்டின் அந்நாட்டு விடுதலைப்போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் உணர்வு ரீதியான உதவிகளை வழங்கியுள்ளார்.

இரபீந்திரநாத் தாகூர் உட்பட சில கவிஞர்களின் படைப்புகளை இத்தாலிய மொழியாக்கம் செய்துள்ள 85 வயதாகும் குரு ரிகோன், பங்களாதேஸ் அரசின் பல தேசிய விருதுகளையும் கௌரவக் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.