2010-10-04 16:18:12

டிஜிட்டல் உலகத்தில் கத்தோலிக்கச் செய்தித் துறை தனது கடமையை உணர அழைப்பு – பேராயர் மரியசேலி


அக்.04,2010. இக்காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வரும் கத்தோலிக்கச் செய்தித் துறை தனது ஆழமானத் தனித்துவத்தையும் தனது பணியையும் கண்டுணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பேராயர் Claudio Maria Celli கூறினார்.



திருப்பீட சமூகத் தொடர்பு அவை உரோமையில் இத்திங்களன்று தொடங்கியுள்ள நான்கு நாள் சர்வதேச கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய அவ்வவைத் தலைவர் பேராயர் மரியசேலி, இக்காலத்திய புதிய தொழிற்நுட்ப உலகில் கத்தோலிக்கச் செய்தித் துறையின் முக்கிய பணிகளைக் கோடிட்டுக் காட்டினார்.



“டிஜிட்டல் உலகத்தில் கத்தோலிக்கச் செய்தித் துறை” என்ற தலைப்பில் இடம் பெற்று வரும் இவ்வுலகக் கருத்தரங்கில் 85 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருப்பது இக்கருத்தரங்கின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாய் அமைகின்றது என்றார் பேராயர்.



அறிவின் அடிப்படையில் எழும் விசுவாசத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதைப் பேணி வளர்ப்பதற்கும் கத்தோலிக்கச் செய்தித் துறையாளர்க்கு இருக்கும் கடமையையும் பேராயர் மரிய சேலி சுட்டிக்காட்டினார்.



இன்று பல செய்தித் துறைகள், சமயம் பற்றிய செய்திகளை அபூர்வமாகவும் சில நேரங்களில் அது குறித்தத் தவறான வழிகளுக்கும் இட்டுச் செல்லும்வேளை, சமயம் குறித்த சரியான தகவல்களைக் கொடுக்க வேண்டியது கத்தோலிக்கச் செய்தித்துறையினரின் பணி என்றும் கூறினார் அவர்.



85 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாக வாழும் ஐரோப்பாவில்கூட கிறிஸ்தவர்கள் பாகுபாடுகளை எதிர்நோக்கும்வேளை இச்சூழலில் கத்தோலிக்கச் செய்தித்துறையினரின் கடமை என்னவென்பதைச் சிந்திக்குமாறும் பேராயர் மரிய சேலி கேட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.