2010-10-02 15:48:41

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
ஒவ்வொரு நாளும் வத்திக்கான் வானொலியில் "வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை"களை அறிவிக்கிறோம். வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் சொல்ல நேரமில்லாததால், ஒரு சிலவற்றைத் தேர்வு செய்து சொல்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் போது, மனம் பாரமாவதை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். மனித வரலாற்றின் அதிகமான பக்கங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளனவே என்று கவலைப்பட்டிருக்கிறேன்.
மனித வரலாற்றில் காணப்படும் வன்முறைகளுக்குப் பல வழிகளில் பதில் சொல்லப்பட்டுள்ளன. இன்றும் நாம் பதில்கள் சொல்லி வருகிறோம். வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்று வழிகளைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகச் சொல்லலாம். பழிக்குப் பழி என்ற இந்த வழியை நியாயப்படுத்த, ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்று சமாதானமும் சொல்லிக் கொள்ளலாம். ஒரு சில வாரங்களுக்கு முன் வாரம் ஓர் அலசல் பகுதியில் சகோதரி தெரேசா கூறிய அந்த நிகழ்வு உங்களுக்கு நினைவிருக்கலாம்.
சவுதி அரேபியாவில் இரு ஆண்டுகளுக்கு முன் 22 வயது இளைஞன் அசிஸ் அல்-மித்தைரியின் முதுகில் ஒருவர் கத்தியால் வெட்டியதால், அசிஸின் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களின் செயல் இழந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியைத் தந்தது. அசிஸைக் கத்தியால் வெட்டியவரின் தண்டு வடமும் அதேபோல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, அவரும் உறுப்புக்கள் செயலிழந்து வாழ வேண்டும் என்பதே அத்தீர்ப்பு. இது போன்ற தண்டனையை மருத்துவ முறையில் எப்படி செய்ய முடியும் என்று ஒரு மருத்துவ மனையும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது. நிகழ்ந்த வன்முறைக்கு நீதி வழங்குவதாக நினைத்து, அந்த நீதிபதி வழங்கியத் தீர்ப்பு வன்முறையை வளர்க்க ஒரு வாய்ப்பு.

வரம்புகளை மீறி வளர்ந்து வரும் வன்முறைகளுக்கு மனித நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம் முறையிடுவது வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் இரண்டாவது வழி.... அபக்கூக்கு என்ற இறைவாக்கினர் எழுப்பும் முறையீட்டை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:

இறைவாக்கினர் அபக்கூக்கு 1 : 2-3
ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்: நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்: நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன: வழக்கும் வாதும் எழும்புகின்றன. 
ஒவ்வொரு நாளும் நமது பத்திரிக்கைகளைப் பிரிக்கும் பொது, அல்லது தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்க்கும் போது நமது மனதிலும் இறைவாக்கினரின் வார்த்தைகள் தாமே எதிரொலிக்கின்றன.
அயோத்திப் பிரச்சனைக்கு அலகாபாத் நீதி மன்றம் தீர்ப்புச் சொல்வதற்கு முன் நம்மில் எத்தனை பேர் நிம்மதி இழந்தோம்? போபால் நச்சு வாயு விபத்தால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளன? அந்த விபத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நீதியையே எள்ளி நகையாடிய ஒரு தீர்ப்பு என்று சொன்னோம். கந்தமால் பகுதியில் நடந்த வன்முறைகள், குஜராத்தில் நடந்த வன்முறைகள், மும்பையில் நடந்த வன்முறைகள் என்று நமது நீதி மன்றங்களில் நிரந்தரமாய் குடியேறிவிட்ட வன்முறைகள், நீதிக்கே புது இலக்கணங்கள் சொல்லி வருகின்றன. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னரும் தொடரும் வன்முறைகள், பாகிஸ்தானில் வெள்ளம் சூழ்ந்த நேரத்திலும் எழுந்த வன்முறைகள்... இப்படி வன்முறையிலேயே ஊறிப் போயுள்ளது உலகம். மனித வரலாற்றைப் பல்வேறு காலங்களாக நாம் பிரிக்கிறோம். நாம் வாழும் இக்காலத்தை வன்முறையின் யுகம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. நமது நம்பிக்கையைக் குழி தோண்டி புதைக்கும் வன்முறைகள் தானே இவைகள் எல்லாம். வன்முறைகளுக்கு விடை தேடிய இறைவாக்கினருக்கு இறைவன் தந்த பதில் இது:

இறைவாக்கினர் அபக்கூக்கு 2 : 2-4
ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர். 
இறைவனிடம் முறையிட்டு, அவரது நீதிக்காகக் காத்திருப்பது; காலம் தாழ்த்தினாலும் இந்த நீதி கட்டாயம் வரும் என்று நம்பி வாழ்வது வன்முறைக்கு நாம் பதில் தரும் இரண்டாவது வழி.

வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்றாவது வழி, இயேசு சொன்ன, பல உயர்ந்த உள்ளங்கள் சொன்ன, வள்ளுவர் சொன்ன வழி: “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”.
நீதிக்காக குரல் கொடுத்து, அதன் விளைவாக, 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி திருப்பலி நேரத்தில் தன் உயிரைக் கொடுத்த பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கூற்றுக்கள் அடங்கிய ஒரு புத்தகம் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புத்தகத்தின் தலைப்பு: ‘அன்பின் வன்முறை.’ (THE VIOLENCE OF LOVE Oscar Romero. Compiled and translated by James R. Brockman, S. J.) இந்நூலில் காணப்படும் பேராயர் ரொமேரோவின் கூற்றுக்களில் ஒன்று இது: நான் பறைசாற்றும் வன்முறை கத்தியைச் சார்ந்ததல்ல. வெறுப்பை வளர்ப்பதல்ல. அன்பைச் சார்ந்தது. இந்த வன்முறையால் அழிவுக்குப் பயன்படும் ஆயுதங்கள், ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படும் கருவிகளாக மாற்றப்படும். (THE VIOLENCE we preach is not the violence of the sword, the violence of hatred. It is the violence of love, of brotherhood, the violence that wills to beat weapons into sickles for work. - Oscar Romero, November 27, 1977)
லண்டனில் மிகவும் புகழ் பெற்ற Westminster Abbey என்ற கோவிலின் முகப்பில் இருபதாம் நூற்றாண்டு மறை சாட்சிகள் என்று பத்து பேரின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. இந்தப் பத்து பேரில் ஒருவராக அக்கோவில் முகப்பை அலங்கரிக்கும் மற்றொருவர்... கைதி எண் 16670. வன்முறைக்கு அன்பால் பதிலளித்தவர்களில் ஒருவர் கைதி எண் 16670. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1982ல் இவரைப் புனிதராக உயர்த்தியபோது, 'வன்முறையால் துன்புறும் நம் காலத்திற்குப் பாதுகாவலர்' "The Patron Saint of Our Difficult Century" என்று இவரைக் கூறினார். அவரது இயற்பெயர் மாக்சிமில்லியன் கோல்பே. பிரான்சிஸ்கன் சபை குரு கோல்பே, நாசி அராஜகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். தனது பிரான்சிஸ்கன் மடத்தில் ஆயிரக் கணக்கான யூதர்களுக்கு அடைக்கலம் தந்தவர். எனவே நாசிகளால் Auschwitz வதை முகாமில் அடைக்கப்பட்டார். தன்னைச் சுற்றிலும் அழிவையும், வன்முறையையும் கண்ட கோல்பே, கூட இருந்த கைதிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க பெரும் முயற்சி செய்தார். 1941, ஜூலை மாதம் வதை முகாமிலிருந்து பல கைதிகள் தப்பித்தனர். எனவே மீதம் இருந்த கைதிகளைக் காவலர்கள் வளைத்தனர். தப்பித்த ஒரு கைதிக்கு பத்து கைதிகள் சாக வேண்டும் என்று முடிவெடுத்தனர். அப்போது, அங்கு சாவதற்கு குறிக்கப்பட்ட ஒரு குடும்பத் தலைவனுக்குப் பதில் குருவான கோல்பே தான் சாகத் தயார் என்று முன் வந்தார். அவரை உணவின்றி அடைத்து வைத்தனர். 1941 ஆகஸ்ட் 14 அவர் பட்டினியால் இறக்கவில்லை என்பதை அறிந்து, அமில ஊசி மூலம் அவரைக் கொன்றனர். இரவும் பகலும் வன்முறைகளின் மத்தியில் வாழ்ந்து வந்தாலும், வன்முறைக்குப் புனித கோல்பேயின் பதில் அன்பு ஒன்றே. நாசி வதை முகாமில் வன்முறையின் பல கோர வடிவங்களைக் கண்டு வந்த பல கைதிகள் குருவான கோல்பே மிகுந்த அமைதியுடன் இறந்ததைக் கண்டு கடவுள் மீதும், மனித குலத்தின் மீதும் தங்கள் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது என்று கூறியுள்ளனர்.

இச்சனிக் கிழமை காந்தி அடிகளின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தோம். இதே நாள் அகில உலகமெங்கும் அகிம்சை நாளாகக் கொண்டாடப்படுகிறது. காந்தி அடிகளின் கூற்றுக்களில் பல வன்முறைக்கு அன்பை, பொறுமையைப் பதிலாகத் தரக்கூடிய மூன்றாம் வழியை வலியுறுத்துகின்றன.
"வன்முறையற்ற அகிம்சை என்பது நாம் உடுத்தும் சட்டையைப் போல வேண்டும்போது பயன் படுத்தும் கொள்கை அன்று. நம் வாழ்வின் அடித்தளமாய் இருப்பது அது."
“Nonviolence is not a garment to be put on and off at will. Its seat is in the heart, and it must be an inseparable part of our being.”
தற்காலிகமாய் நன்மை விளைவிப்பதைப் போல் தெரிந்தாலும், வன்முறை நிரந்தரமாய் தீமையை மட்டுமே விளைவிக்கும். எனவே, அதை நான் வன்மையாய் எதிர்க்கிறேன்.
“I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent.”
வன்முறைகளைப் பற்றி நினைக்கும் போது, அரசியல் மற்றும் பொது வாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம் தெரியும். நமது செய்திகளிலும் இவைகளே அதிகம் பேசப்படும். ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. நமது இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், குழந்தைகள் மீது காட்டப்படும் வன்முறைகள், பெண்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் வன்முறைகள்... இந்தப் பட்டியல் வெகு நீளமானது. இந்த வன்முறைகள் வெகு ஆழமானவை. இவைகள் பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மெளனமாக சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவைகள் செய்திகள் ஆகாததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகின்றன.
 வன்முறையின் பல வடிவங்களை உலகில் வளர்த்து வரும் வெறுப்பு வேதாந்தங்களுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கைவிடாமல், நன்மையை, உண்மையைப் பின்பற்ற இறையருளை வேண்டுவோம். இந்த நம்பிக்கை கடுகளவே இருந்தாலும், மலைகளையும் மரங்களையும் பெயர்ந்து போகச் செய்யும். வெறுப்பு எனும் கோட்டையை தகர்த்து விடும். அன்பு அனைத்தையும் வெல்லும். தொடர்ந்து நம்புவோம். வன்முறைக்கு அன்பை பதிலாக வாழ்ந்து காட்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.