2010-09-29 16:07:19

நம்பிக்கையை அறிவிப்பது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் பணி - பேராயர் கார்லோ


செப்29,2010. சில ஊடகங்கள், உண்மையான மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கும் வேண்டத்தகாத செய்திகளை வெளியிடுவதற்கும் முனைப்பாய் இருக்கும் இக்காலத்தில், நம்பிக்கையை அறிவிப்பது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் முக்கிய வேலையாய் இருக்க வேண்டும் என்று கூறினார் பேராயர் கார்லோ மரிய விகானோ Carlo Maria Viganò.
இந்த கடினமானப் பணிக்கு மிகுந்த தைரியமும் இறைவனின் சிறப்பான உதவியும் தேவை என்றும் உரைத்த பேராயர் விகானோ, கடவுளின் வல்லமை எனப்படும் அதிதூதர் கபிரியேலுடன், அதிதூதர்கள் மிக்கேல், இரபேல் ஆகியோரின் பரிந்துரைகளையும் இறைஞ்சுவோம் என்றார்.
வத்திக்கான் வானொலியின் பாதுகாவலராகிய அதிதூதர் கபிரியேல் விழாவை முன்னிட்டு, இப்புதனன்று வத்திக்கான் வானொலிச் சிற்றாலயத்தில் அவ்வானொலிப் பணியாளர்களுக்குத் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய வத்திக்கான் நிர்வாகத்தின் பொதுச் செயலர் பேராயர் விகானோ இவ்வாறு கூறினார்.
வானொலியைக் கண்டுபிடித்த குல்யெல்மோ மார்க்கோனியால் வடிவமைக்கப்பட்ட வத்திக்கான் வானொலியின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டு, இவ்வானொலி திருத்தந்தை மற்றும் திருச்சபையின் குரலாக இருந்து வருவது குறித்தும், குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது இது ஆற்றிய அரும்சேவைகளையும் பாராட்டினார்.செப்டம்பர் 29 அதிதூதர்கள் மிக்கேல் கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவாகும்.







All the contents on this site are copyrighted ©.