2010-09-29 16:35:15

செப்டம்பர் 30 – நாளும் ஒரு நல்லெண்ணம்


தேடுங்கள்; கண்டடைவீர்கள்!

மரம் நட்டவன் தண்ணீர் ஊற்றாமல் போவானா என்றொரு சொல் நம் கிராமப்புறங்களில் உண்டு. மரத்திற்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் மனிதனுக்கு அது பொருந்தாது.

நம் தேவைகளின் விடைகள் எல்லாம் நம் அருகிலேயே புதைத்து வைக்கப்படவில்லை. சிரமப்பட்டுத் தேடித்தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. வாழ வழிகள் பல இன்று திறந்து கிடக்கின்றன. தானாகவே வந்தவைகள் அல்ல அவைகள். எத்தனையோ முயற்சிகளுக்குப் பின் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கென விட்டுச் சென்றவைகள்.

இசையால் நோய் குணமாகுமா? செடி வளருமா என்று இன்று கேட்கிறார்கள். ஆம் என்கின்றன நேற்றைய ஆய்வுகள். யாரோ தேடியபோது கிடைத்த அறிவியல் வெளிப்பாடுகள் இப்படி எத்தனையோ.

இன்றைய உலகில் எந்த ஒரு தேடலும் முழுமையடைந்ததாக முடக்கப்பட்டு விடவில்லை. ஒரு முனையைத் தொட்டுக்கொண்டு முன்னேறிச் செல்வதைத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன.

தேடும்போது நமக்குக் கிடைக்கும் விடைகள், யாரோ விதைத்த விதையின் முளையிலிருந்து நம்மால் தேடியெடுக்கப்பட்டவைகள்.

நன்மைகள் யாவும் நம்மைச் சுற்றிப் புதையுண்டு கிடக்கின்றன. தேடுவோம். கண்டடைவோம். பின்னர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். தேடினால் கிட்டும் என்ற நம்பிக்கை தொடர்ந்து கொண்டே செல்லட்டும்.








All the contents on this site are copyrighted ©.