2010-09-29 16:07:53

உலகிற்குள் வரும் ஒவ்வொரு உயிரையும் வரவேற்க கத்தோலிக்கர்கள் உழைக்க வேண்டும் - அமெரிக்கக் கர்தினால் டேனியல் டினார்தோ


செப்.29,2010. கருவில் வளரும் உயிரை மதிக்காமல் இருப்பது மனித மாண்புக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதால், உலகிற்குள் வரும் ஒவ்வொரு உயிரையும் வரவேற்க கத்தோலிக்கர்கள் உழைக்க வேண்டும் என்று அமெரிக்கக் கர்தினால் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
பல நாடுகளில் தலத்திருச்சபைகளின் முயற்சியாக, வருகிற அக்டோபர் மாதம் உயிரை மதிக்கும் மாதமாக அனுசரிக்கப்படும் வேளையில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஓர் அங்கமான உயிர்களைப் பேணும் செயல்பாடுகள் குழுவின் தலைவரான கர்தினால் டேனியல் டினார்தோ இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் மாசற்றக் குழந்தைகள் கருவில் அழிக்கப்படும் குற்றம் பெரு நோய்போல் பரவி வருகிறது என்றுரைத்த கர்தினால் டினார்தோ, கரு கலைப்பு செய்து கொள்ளும் பெண்ணும் அவரது துணைவரும் பின்னர் அனுபவிக்கும் வேதனைகள் மிக ஆழமானவை என்பதால், இம்முடிவுகளை நிறுத்த நாம் இன்னும் அதிகமாக முயற்சிகள் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அறிவியல் ஆராய்ச்சிகள் என்ற பெயரில் உயிரை அழிக்க பல நாட்டு அரசுகளும் எடுத்து வரும் முடிவுகளுக்கு மாற்றாக, உயிரை பேணும் முயற்சிகளை இன்னும் வலுப்படுத்த செபத்தின் துணையை நாட வேண்டும் என்று கர்தினால் டினார்தோ வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.