2010-09-29 16:08:14

இலங்கை அரசின் பண உதவியும், பிற உதவிகளும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் - மன்னார் ஆயர்


செப்.29,2010. இலங்கை அரசு அளிக்கும் பண உதவியும், பிற உதவிகளும் மீள் குடியேற்றமடைந்த தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று இலங்கையிலுள்ள தமிழ் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அண்மையில் இலங்கை அரசு அதிகாரிகளைச் சந்தித்த போது, தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு உதவிகள் கிடைக்க விண்ணப்பித்துள்ளார்.
1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டுப் போரினால் இலங்கையின் வட பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த குடும்பங்கள் போர் முடிந்த பின்னர் மீண்டும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப அரசு செய்து வரும் உதவிகள் அனைவருக்கும் சரி சமமாகக் கிடைக்கவில்லை என்பதை ஆயர் சுட்டிக் காட்டினார்.
மன்னாருக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள பல ஊர்களில் வாழும் விவசாயிகளைச் சந்தித்த ஆயர் ஜோசப், அவர்களது தேவைகளைக் கேட்டறிந்த பிறகு, அரசு அதிகாரிகளைச் சந்தித்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.உலக உணவுத் திட்டம், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு, ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பு, இலங்கைக் காரித்தாஸ் அமைப்பு ஆகிய பணி நிறுவனங்கள் வழியாக தமிழர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி 2,38,000 தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர், இன்னும் 28,000 பேர் முகாம்களில் தங்கி வருகின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.