2010-09-27 15:14:08

பிறருக்குச் சேவை புரியும் அன்பின் தேவை குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை


செப். 27, 2010. கடவுள் நமக்குக் காட்டியுள்ள வாழ்வின் சாலையானது வெறும் பாச உணர்வுகளின் அன்பினால் அல்ல மாறாக சேவைக்கான அன்பினால் குறிக்கப்பட்டுள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகமான ஏழை லாசர் மற்றும் பணக்காரன் உவமை குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இவ்வுலகில் நாம் வாழும்போதே இறைவனுக்குச் செவிமடுப்பவர்களாய், அவர் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழவேண்டும், ஏனெனில் இவ்வுலகில் நாம் செய்யும் தவறுகளை மாற்றியமைப்பது என்பது மேலுலகில் காலம் கடந்ததாகிவிடும் என்றார்.

கடவுள் ஏழைகள் மேல் அன்பு கூர்ந்து அவர்களைத் தாழ்நிலையிலிருந்து கைதூக்கி விடுகிறார் என்பதையும், நாம் இவ்வுலகில் வாழும் வாழ்வைப் பொறுத்தே நம் மேலுலகக் கைமாறு இருக்கும் என்பதையும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை.

இத்திங்களன்று திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட புனித வின்சென்ட் டி பால் பற்றியும் குறிப்பிட்ட பாப்பிறை, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின் பாதுகாவலரான இப்புனிதர், கிறிஸ்துவின் அன்பால் தூண்டப்பட்டு, ஏழைகளின் முன்னேற்றத்திற்கானப் பணி அமைப்புகளை உருவாக்கினார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கடந்த சனியன்று திருச்சபையால் முத்திப்பேறுப் பெற்றவராக அறிவிக்கப்பட்ட இத்தாலிய இளம்பெண் கியாரா பதானோ, கிறிஸ்து மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.