2010-09-27 15:14:57

பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணியில் Sant’Egidio குழுவினர்


செப்.27, 2010. பாகிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணி புரிந்து வரும் Sant’Egidio குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல வழிகளிலும் உதவிகள் செய்து வருகின்றனர்.

தென் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Kot Addu என்ற இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பாதி பேர் இஸ்லாமியர்கள் என்றும் பாதி பேர் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இப்பகுதியில் உள்ளவர்களை இதுவரை எந்த அரசு அமைப்புகளும் அணுகவில்லை என்றும், இவர்களுக்கு இதுவரை கிடைத்துள்ள உதவிகள் எல்லாம் அரசு சாரா அமைப்புக்களிலிருந்து வந்துள்ளன என்றும் லாஹூரில் நிறுவப்பட்டுள்ள Sant’Egidioவின் ஒருங்கிணைப்பாளர் சானா இக்பால் கூறினார்.

இப்பகுதி வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், இப்பகுதியின் கல்லறைகள் ஒரு குன்றின் மீது அமைந்து, வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதால் மக்கள் அக்கல்லறைகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், இந்நிலை அம்மக்களின் துயரங்களை எடுத்துக் காட்டும் ஓர் அடையாளம் என்றும் அப்பகுதியில் பணி புரியும் அருள்தந்தை பால் கிறிஸ்டியன் கூறினார்.

Sant’Egidioன் உதவிகளால் 300 குடும்பங்களைச் சார்ந்த 1000 பேருக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.