2010-09-27 15:14:36

ஒவ்வொரு திருப்பயணமும் இறைவனிடம் திரும்பி வருவதற்கான விருப்பத்தையும், புதுப்பித்தலையும் உள்ளடக்கியது - பேராயர் வேலியோ


செப். 27, 2010. ஆன்மீகம் சார்ந்த ஒவ்வொரு திருப்பயணமும் இறைவனிடம் திரும்பி வருவதற்கான விருப்பத்தையும், புதுப்பித்தல் மற்றும் ஒப்புரவிற்கானத் தேடுதலையும் உள்ளடக்கியதாக உள்ளது என்றார் திருப்பீட அதிகாரி பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ.

திருப்பயணங்கள் மற்றும் திருத்தலங்களில் மேய்ப்புப்பணி செய்வோர்க்கான இரண்டாவது உலக மாநாட்டில் உரையாற்றிய திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் வேலியோ, நம்முடைய வெளித்திருப்பயணமானது, இறைவன், ஒப்புரவு, புதுப்பித்தல் ஆகியவைகளுக்கான விருப்பத்தை உள்ளடக்கிய உள்ளார்ந்த திருப்பயணத்தின் சாயலே என்றார்.

இன்றைய உலகில் மீண்டும் நற்செய்தி அறிவிப்பதற்கான அவசியத்தையும், அத்தேவை நிறைவேற்றப்பட திருத்தலங்கள் வழங்கிவரும் வாய்ப்புகளையும் திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டுவதையும் தன்னுரையில் குறிப்பிட்டார் பேராயர். திருத்தலங்கள் என்பவை, மக்கள் ஒன்றிணைவதற்கான இடமாக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தல், திருப்பயணியின் இதயத்திலிருந்து எழும் கேள்விகளை ஆராய்தல், திருப்பயணிகளை வரவேற்பதில் முக்கியத்துவம் அளித்தல், திருப்பயணத்தின் கிறிஸ்தவ குண நலன்களுக்கு இயைந்த வகையில் பரிந்துரைகளை முன்வைத்தல், திருப்பயணத்திற்கென்று ஒரு நோக்கம் உள்ளது என்பதைத் திருப்பயணிகள் உணர வைத்தல் என திருத்தந்தையின் செய்தியில் காணப்படும் 5 பரிந்துரைகளையும் எடுத்தியம்பினார் பேராயர் வேலியோ.

இஸ்பெயினின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் இம்மாநாட்டில் தமிழகத்தின் வேளாங்கண்ணி திருத்தல அதிபர் அருள்திரு மைக்கிள் உட்பட 75 நாடுகளிலிருந்து சுமார் 250 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.