2010-09-25 15:53:48

நவம்பர் 6-7,2010 சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவில் திருத்தந்தை


செப்.25,2010. ஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவில் வருகிற நவம்பர் 6, 7 தேதிகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளவிருக்கின்ற திருப்பயணம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
நவம்பர் 6ம் தேதி சனிக்கிழமை காலை உரோமையிலிருந்து புறப்படும் திருத்தந்தை, சந்தியாகோ தெ கொம்போஸ்தெலா சென்று அப்பேராலயத்தைத் தரிசிப்பார். அன்று ஸ்பானிய ஆயர்களுடன் மதிய உணவு அருந்துவார். பின்னர் மாலையில் கொம்போஸ்தெலா புனித ஆண்டு திருப்பலி நிகழ்த்துவார்.
பின்னர் சனிக்கிழமை மாலை பார்செலோனா செல்வார். நவம்பர் 7, ஞாயிறன்று ஸ்பெயின் அரசர், அரசியைச் சந்திப்பார். பின்னர் La Sagrada Familia பேராலயத்தைத் திருநிலைப்படுத்தி அன்று மாலையே உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை.
மத்திய காலத்தில் முக்கியமான திருத்தலமாக மாறிய சந்தியாகோ தெ கொம்போஸ்தெலா திருத்தலத்தில் திருத்தூதர் பெரிய யாகப்பர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பாரம்பரியம் கூறுகிறது. பார்செலோனாவில் அந்தோணி கவ்தி என்ற கலைஞரின் தலைசிறந்த கலைப்படைப்பான La Sagrada Familia பேராலயம் 1882ம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டது. இது 2025ம் ஆண்டில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.